பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (வயது 86) உடல்நலக்குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாடா உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள தேசிய கலை மையத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்களும், டாடா குழுமத்தின் நிர்வாகிகள், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அரசு சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் மற்றும் பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதன்பிறகு, ரத்தன் டாடாவின் உடலுக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. காவல்துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர், ரத்தன் டாடாவின் உடலுக்கு பார்சி சமூக முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
புதிய தலைவர் நியமனம்
இந்நிலையில், டாடா குழுமத்தின் டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா இன்று வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற டாடா அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில், டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவைத் தொடர்ந்து, நோயல் ரத்தன் டாடாவின் குடும்ப உறவுகள் மற்றும் பல டாடா குழும நிறுவனங்களில் ஈடுபாடு காரணமாக அவருக்குப் பின் ஒரு வலுவான போட்டியாளராகக் காணப்பட்டார். நேவல் மற்றும் சிமோன் டாடாவின் மகனான நோயல் தற்போது ட்ரெண்ட், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் மற்றும் டாடா இன்டர்நேஷனல் ஆகியவற்றின் தலைவராக உள்ளார். டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
நோயலுக்கும் ரத்தனுக்கும் பல வருடங்களாக உறவில் விரிசல் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் 2019 இன் பிற்பகுதியில் சர் ரத்தன்ஜி டாடா அறக்கட்டளையின் அறங்காவலராகவும், 2022 இல் மட்டுமே சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் அறங்காவலராகவும் ஆக்கப்பட்டார்.
நோயல் டாடா நியமனத்தின் முக்கியத்துவம்
தனிப்பட்ட டாடா நிறுவனங்களுக்கான ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் குழுமத்தை, அறக்கட்டளைகளுக்குத் தலைமை தாங்குபவர்கள் மறைமுகமாக கட்டுப்படுத்துவதால், டாடா அறக்கட்டளைகளாக நோயலின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
டாடா சன்ஸ் குழுமம் தனிநபர்களுக்கு சொந்தமானது அல்ல. ஆனால் இரண்டு தொண்டு அறக்கட்டளைகளுக்கு சொந்தமானது. அதாவது, சர் ரத்தன்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிவற்றுக்குச் சொந்தமானது. பெரும்பாலான சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய சர் ஜாம்செட்ஜி டாடாவின் மகன்களின் நினைவாக இந்த அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்த அறக்கட்டளைகள் தான் டாடா குழுமத்தில் 66 சதவீத பங்குகளை வைத்து கட்டுப்படுத்தி வருகின்றன. ஆனால், அதன் உரிமை முறை சிறிது நீர்த்துப்போகலாம்.
ரத்தன் டாடாவின் மரணத்திற்குப் பிறகு ஏன் வாரிசு வரிசை தெளிவாகத் தெரியவில்லை?
ரத்தனின் மரணத்துடன், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் தானாகவே நோயலுக்குச் சென்றுவிடும் என்பது அனைவரின் அனுமானம். ஆனால், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியாகிய அறிவிப்பு வரை விஷயங்கள் தெளிவாக இல்லை. அவருக்கு முன் இருந்த பலரைப் போலவே, ரத்தன் தனது உயிலில் எதையாவது எழுதினாரே ஒழிய, தனது இடத்தை யார் பெற வேண்டும் என்பதில் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கவில்லை.
இதற்கிடையில், டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் கீழ் டாடா குழுமத்தின் வணிக செயல்பாடுகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.