ராம்நாத் கோயங்கா நினைவு கருத்தரங்கம்: தைரியமான நீதிபதிகளும், சுதந்திரமான பத்திரிகையாளர்களும் தேவை- நீதிபதி ரஞ்சன் கோகாய்

ராம்நாத் கோயங்கா பற்றி பேசும் போது “அவர் மனதில் இருப்பதை, உண்மையை பேச என்றும் மறுக்காதவர். அவருக்கு உண்மையின் சக்தி எதுவென்று தெரியும்.’ என்றார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் தலைமை ஆசிரியர் மற்றும் மறைந்த முன்னாள் பத்திரிக்கையாளர் ராம்நாத் கோயங்கா நினைவு நாளை ஒட்டி, ஒவ்வொரு வருடமும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஒரு கருத்தரங்க நிகழ்வினை ஏற்பாடு செய்யும்.

மூன்றாம் ஆண்டு ராம்நாத் கோயங்கா நினைவு தின கருத்தரங்கம் நேற்று மாலை புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்து கொண்டு உரையாடினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் ப. சிதம்பரம், அஷ்வனி குமார், மூத்த வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங், நீதிபதிகள் சந்திரசுட், நவின் சின்ஹா, தீபக் குப்தா, அசோக் பூஷன், கீதா மித்தல், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹ்ரிஷிகேஷ் ராய் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Rajendra Mal Lodha

நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள்
தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா

மூர்த்திபவன் கலையரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நீதியின் பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார் நீதிபதி கோகாய். நீதி மன்றங்கள் இந்திய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிறது. அதனால் அது அசுத்தமற்றும், நேர்மையாகவும், மிக விரைவில் செயல்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஜனநாயகம் எப்படி இறக்கின்றது (How Democracy Dies) என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளியான கட்டுரையின் சிலவரிகளை மேற்கொள் காட்டி பேசினார் கோகாய்.

Justice Ranjan Gogoi

நிகழ்வில் பேசிய ரஞ்சன் கோகாய்

“தைரியமான நீதிபதிகளும், சுதந்திரமான பத்திரிக்கையாளர்களும் தான் ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டிய வரிசையில் முதலில் நிற்கிறார்கள். ஜனநாயகம் இறப்பைப் பற்றி மிக அதீத கற்பனையில் செய்திகள் வெளிவரும் போது, ஜனநாயகத்தை அவர்களிடம் இருந்து காப்பதும் நீதிபதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தான்” என்று அந்தக் கட்டுரையில் சில வரிகள் இடம் பெற்றிருந்தன.

அதைப்பற்றி பேசிய கோகாய் “தைரியமான பத்திரிக்கையாளர்களும் சுதந்திரமான நீதிபதிகளும் தேவை என அதை மாற்றி கூற விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் 12ம் தேதி நீதிபதி கோகாய் மற்றும் அவருடன் பணிபுரியும் இதர நீதிபதிகளான ஜெ. செலமேஷ்வர் (ஓய்வு பெற்றவர்), மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள். அதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்களுக்கு “நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் விசாரணைகள் மற்றும் வழக்குகள்” குறித்து எழுதிய கடிதம் பற்றி பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்தரங்கில் கார்ல் ஜங், அரிஸ்டாட்டில் மற்றும் உலகத் தலைவர்கள் பலரின் கருத்துகள் பற்றியும் பேசினார். இன்றைய நீதித்துறை “பழைய கருவிகளை குறை சொல்லும் ஏழை உழைப்பாளி போல் இல்லாமல், கருவிகளே இல்லாமல் வேலை செய்யும் உழைப்பாளிகள் போல் தான் இருக்கிறது” என்றும், பிரெஞ்ச் எழுத்தாளர் கூறிய “இங்கு சொல்லப்பட்ட அனைத்தும் நம் முன்னோர்கள் ஏற்கனவே சொன்னது தான். யாரும் அதை கேட்கவில்லை என்பதால் நாம் மீண்டும் மீண்டும் சொல்ல நிர்பந்திக்கப்படுகிறோம்” என்பதையும் அவர் மேற்கோள் காட்டினார்.

இந்திய ஜனநாயகத்தின் இரண்டு இந்தியாக்கள் பற்றி பேசினார். ஒன்று, இது புதிய இந்தியா, நாம் புதிய இந்தியாவில் புதுமைக்காக காத்திருக்கிறோம் என்ற வகுப்பினர். மற்றொன்று வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வர்க்கத்தினர் வாழும் இந்தியா” என்றார்.

Anant Goenka

சிறப்பு விருந்தினரை கௌரவிக்கும் ஆனந்த் கோயங்கா

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் உரிமையாளர், மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் ராம்நாத் கோயங்கா பற்றி பேசும் போது “அவர் மனதில் இருப்பதை, உண்மையை பேச என்றும் மறுக்காதவர். அவருக்கு உண்மையின் சக்தி எதுவென்று தெரியும். இன்று எத்தனை பேரில் ராம்நாத் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவரின் சிந்தனைகளை எத்தனை பேர் பின் தொடர்கிறோம்” என்று கேள்வி எழுப்பினார் கோகாய்.

மேலும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்கிய அலெக்சாண்டர் ஹாமில்டன் பற்றியும், இந்தியாவில் “டெல்லி கவர்னர் மற்றும் ஆளுநருக்கு இடையே நடந்த அதிகாரப் போருக்கும், தன்பாலின ஈர்ப்பு குற்றமா என்பதைப் பற்றியும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்திய அரசியலமைப்பின் அறநெறி குறிப்பிடப்பட்டதையும்” பேசினார் நீதிபதி.

surya kant

பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த்

விழாவில் கலந்து கொண்ட நீதிபதியினை வரவேற்று பேசினார் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் தலைமை ஆசிரியர் ராஜ் கமல் ஜா. அதில் அவர் “ஊடகமும், நீதித்துறையும் ஒன்றுக்கொன்று அதிக தொடர்புடையது. இரண்டு துறைகளிலும், ஒவ்வொரு நிகழ்விற்கும் இருக்கும் இரண்டு பக்கங்களையும், பல கோணங்களில் இருந்து கிடைக்குக் கதைகளையும் கேட்டு அதன்படி ஒரு முடிவிற்கு வர வேண்டும்” என்று கூறினார்.

விருந்தினர்களை வரவேற்று துணை ஆசிரியர் சீமா சிஷ்ட்டி பேசினார். நிகழ்வினை ஜிண்டால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜ் குமார் முடித்துவைத்தார்.

இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு ராம்நாத் கோயங்கா நினைவு நாள் கருத்தரங்குகளையும் பாரதிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close