கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்

கர்நாடகாவில் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இம்மாதம் 24ம் தேதி வரை நடைபெறும்.

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. இதனால் எந்தப் பரபரப்பான சூழ்நிலையும் ஏற்படாமல் இருக்கத் தேர்தல் அலுவலகங்களைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடைபெற இருக்கும் இந்தத் தேர்தலுக்கான மனு தாக்கல் தேதியைக் கடந்த மார்ச் 27-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவ்வாறு இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இன்று இந்த வேட்புமனு தாக்கல் துவங்கி நடைபெறுகிறது.

இன்று துவங்கியுள்ள மனு தாக்கல், இம்மாதம் 24ம் தேதி வரை நடைபெறும். பின்னர் 25ம் தேதி மனு தாக்கல் பரிசீலனைச் செய்யப்படும். வேட்பு மனு தாக்கல் செய்வோர், அவர்களின் மனுக்களை வாபஸ் பெற 27ம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு கிழமைகளில் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களின் மனுவைத் தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால், தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன் மனு தாக்கல் செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கட்டுப்பாடுகளை மீறுவோரின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close