பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி : நீரவ் மோடிக்கு பிடிவாரண்ட்!

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் நீரவ் மோடிக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ்மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கினார். பின்பு, வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. நீரவ் மோடியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும் நீரவ் மோடி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம், 12,000 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், நீரவ் மோடி மீதும், அவரது தந்தை, மைத்துனர் உள்ளிட்ட உறவினர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஹாங்காங்கில் நீரவ் மோடி பதுங்கியிருப்பதாக கருதப்பட்டு வந்த நிலையில், லண்டனில் அவர் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் மும்பை நீதிமன்றம் நீரவ் மோடிக்கு எதிராக ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை இன்று பிறப்பித்துள்ளது.

×Close
×Close