கடந்த சில நாள்களாகவே, பஞ்சாப் அரசியல் களம் பரப்பாகவே காணப்படுகிறது. செப் 18 ஆம் தேதி பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸில் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் எனத் தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து, பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.இது அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், உட்கட்சி பூசல் விஷ்வருபம் எடுக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் அமரீந்தர் திடீரென டெல்லி சென்றார். அவர் பாஜகவில் இணையத்தான் சென்றுள்ளதாக, சமூக வலைதளத்தில் கருத்து பகிரப்பட்டு வந்தது.
டெல்லியில் நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அமரீந்தர் சிங் இன்று காலை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானால் மாநிலத்தில் ஏற்படும் எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அதன்பிறகு பேசிய அமரீந்தர், ” அவமானப்படுத்தப்பட்ட மற்றும் நம்பிக்கை இல்லாத இடத்தில் ஒருபோதும் இருக்கமாட்டேன். நான் விரைவில் ராஜினாமா செய்வேன். காங்கிரஸில் தொடரும் எண்ணம் இல்லை. மூத்தவர்கள் தான் கட்சிக்கு முக்கியமானவர்கள். அவர்கள் வடிவமைக்கும் திட்டங்களை செயல்படுத்த இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக,மூத்த தலைவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இது கட்சிக்கு உகந்தது இல்ல. நான் ஏற்கெனவே எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிட்டேன். அதேசமயம் பாஜகவிலும் சேர மாட்டேன்” என்றார்.

தொடர்ந்து, கபில் சிபல் வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தார். கட்சித் தலைமைக்கு விருப்பமில்லாத கருத்துக்களை அவர் தேர்ந்தெடுத்ததால் தான் இந்த தாக்குதல் நடந்தது என அமரீந்தர் சிங் கூறினார்.
நவ்ஜோட் சிங் சித்து குறித்து விமர்சித்த அமரிந்தேர் சிங், “கூட்டங்களில் மக்களை கவர மட்டுமே அவர் பயன்படுவார். குழுவை எப்படி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பது அவருக்கு தெரியாது. மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த பலருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். நான் கூட மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து உள்ளேன். சித்து போல் நாடகமாடாமல் அவர்கள் அனைவரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டுள்ளார்கள்.
முன்னதாக, அமித் ஷாவை சந்தித்த கேப்டன் அமரீந்தர் விவசாயிகளின் பிரச்சனையுடன், பஞ்சாப் மாநில பாதுகாப்பு தொடர்பான கவலையையும் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil