Advertisment

மல்யுத்தம் உள்பட 16 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளில் பாலியல் புகார்கள் குழு இல்லை; காற்றில் பறக்கும் விதிகள்

விளையாட்டுகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆனால் 30 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளில் 16 அமைப்புகள் PoSH சட்டத்திற்கு இணங்கவில்லை; ஒன்று அவர்களிடம் உள் புகார் குழு இல்லை அல்லது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை

author-image
WebDesk
New Update
wrestlers

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா (புகைப்படம்: பிரவீன் கண்ணா)

Amit Kamath , Mihir Vasavda

Advertisment

ஜந்தர் மந்தரில் கிட்டத்தட்ட 24x7 (24 மணி நேரம்) என்ற அளவில் 11 நாட்களை கடந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது; எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உச்ச நீதிமன்றக் கதவு தட்டப்பட்டது; முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் புகார்களை கடுமையாக எதிர்த்து வரும் நிலையிலும் கூட, பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு தங்கள் ஆதரவைக் கொடுக்குமாறு சக விளையாட்டு வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

ஆவணங்களின்படி, மற்றும், சட்டப்படி, இதுபோன்று போராட்டம் நடக்க வேண்டியதில்லை.

உண்மையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ.க எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நாட்டின் சில முன்னணி மல்யுத்த வீரர்கள் சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த எம்.சி மேரி கோம் தலைமையிலான அரசாங்க குழு, ஒரு "முக்கிய குறைபாட்டை" சுட்டிக் காட்டியுள்ளது: 2013 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் தடுப்பு (PoSH) சட்டத்தால் கட்டாயம் நிறுவப்பட வேண்டிய உள் புகார்கள் குழு (ICC) மல்யுத்த அமைப்பில் இல்லை.

மல்யுத்த அமைப்பு மட்டும் சட்டத்தை மீறவில்லை.

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்றுள்ள 30 தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளில் 16 கூட்டமைப்புகள் இந்தக் கட்டாய உள் புகார்கள் குழு அமைத்தல் நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது, விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பில் சாதனை முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் போது. இந்த வளர்ந்து வரும் போக்கின் குறியீடு, கேலோ இந்தியா விளையாட்டுகளில் (Khelo India Games) பெண்களின் எண்ணிக்கை 2018 முதல் 2020 வரை 161 சதவீதம் அதிகரிப்பைக் காட்டியது.

பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடச் சூழலை உருவாக்கத் தேவையான முக்கிய அங்கமான PoSH சட்டத்தின் கீழ் எந்தவொரு குறைகளுக்கும் அழைப்பு விடுக்கும் முதல் அமைப்பாக உள் புகார்கள் குழு வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, இது குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் குறைந்தது பாதி பெண்கள் மற்றும் ஒருவர் வெளிப்புற உறுப்பினராக இருக்க வேண்டும், வெளிப்புற நபரை பொறுத்தவரை தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்லது பெண்களின் அதிகாரத்திற்காக செயல்படும் சங்கம் அல்லது வழக்கறிஞர் போன்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்சனைகளை நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

publive-image
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா

இந்தியன் எக்ஸ்பிரஸ் அனைத்து 30 கூட்டமைப்புகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மதிப்பாய்வு செய்தது மற்றும் அனைத்துக் கூட்டமைப்பின் அலுவலகப் பணியாளர்களை அணுகியது; இதன் மூலம் மல்யுத்தம் உட்பட ஐந்து கூட்டமைப்புகளுக்கு உள் புகார்கள் குழுவே இல்லை என்பதைக் கண்டறியப்பட்டது; நான்கு கூட்டமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லை; மற்ற ஆறு கூட்டமைப்பில் கட்டாய வெளிப்புற உறுப்பினர் இல்லை மற்றும் ஒரு கூட்டமைப்பில் இரண்டு குழுக்கள் இருந்தன ஆனால் எதிலும் சுயாதீன உறுப்பினர் இல்லை.

ஒவ்வொரு கூட்டமைப்பிலும் உள் புகார்கள் குழுவின் நிலை மற்றும் கூட்டமைப்பின் பதில்:

1). ஜிம்னாஸ்டிக்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா

நிலை: உள் புகார்கள் குழு இல்லை; ஆனால் ஆறு பேர் கொண்ட குழுவில் இரண்டு பெண்களைக் கொண்ட ஒரு "விசாரணைக் குழு" உள்ளது, வெளிப்புற உறுப்பினர் இல்லை.

பதில்: “எல்லாப் பிரச்சினைகளுக்கும் எங்களிடம் விசாரணைக் குழு உள்ளது. உலக அமைப்பின் வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். ஒரு மாதத்திற்கு முன்பு வரை, எந்தக் குழுவும் இல்லை, ஆனால் இப்போது எங்களிடம் குழு உள்ளது, ”என்று தலைவர் சுதிர் மிட்டல் கூறினார்.

2. இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு

நிலை: உள் புகார்கள் குழு இல்லை

பதில்: "சில மாதங்களுக்கு முன்பு தான் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளதால், நாங்கள் சட்டப்பூர்வ நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறோம், மேலும் ஒரு மாதத்தில் உள் புகார்கள் குழு செயல்படும்" என்று பொதுச் செயலாளர் கமலேஷ் மேத்தா கூறினார்.

3. இந்திய கைப்பந்து கூட்டமைப்பு

நிலை: உள் புகார்கள் குழு இல்லை

பதில்: “டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் எங்கள் கூட்டமைப்பின் தேர்தல் நடந்தது. மே 20 அன்று எங்களின் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது, அதன் பிறகு ஒரு குழு அமைக்கப்படும், ”என்று பொதுச் செயலாளர் பிரித்பால் சிங் சலுஜா கூறினார்.

4. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு

நிலை: உள் புகார்கள் குழு இல்லை

தற்போதைய போராட்ட சூழ்நிலைக்குப் பிறகு, அரசாங்கம் கடந்த வாரம் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பால் (IOA) நியமிக்கப்பட்ட தற்காலிகக் குழுவிடம் மல்யுத்த கூட்டமைப்பின் அன்றாட விவகாரங்களை ஒப்படைத்துள்ளது.

5. இந்திய கைப்பந்து கூட்டமைப்பு

நிலை: உள் புகார்கள் குழு இல்லை

பதில்: “பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் இருந்தால், அவை கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் எழுப்பப்படும். தனி குழு இல்லை. எந்த ஒரு விஷயமும் பொதுக்குழு கூட்டத்தில் எழுப்பப்பட்டு அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களும் முடிவு செய்வார்கள்,” என பொதுச் செயலாளர் அனில் சௌத்ரி கூறினார்.

6. ஜூடோ ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (ஒரு நிர்வாகியால் நடத்தப்படுகிறது)

நிலை: உள் புகார்கள் குழுவில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்

கருத்து: “நான்காவது உறுப்பினரை நியமிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம், அவர் ஒரு சுயாதீன நிபுணராகவும் இருப்பார். இது வரும் நாட்களில் நிறைவேற்றப்படும்” என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

publive-image
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி உஷா புதன்கிழமை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை சந்தித்தார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - பிரேம் நாத் பாண்டே)

7. ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா

நிலை: உள் புகார்கள் குழுவில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்

பதில்: "சில வாரங்களில் எங்கள் வருடாந்திர கூட்டத்தை நாங்கள் நடத்தவிருக்கிறோம், பின்னர் எங்கள் குழுவில் நான்காவது உறுப்பினர் இருப்பார்" என்று பொதுச் செயலாளர் சைரஸ் போஞ்சா கூறினார்.

8. இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பு (ஒரு நிர்வாகியால் நடத்தப்படுகிறது)

நிலை: உள் புகார்கள் குழுவில் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்

பதில்: "எங்களிடம் இப்போது ஒரு நீதிபதி மற்றும் ஒரு பயிற்சியாளர் உள்ளனர். எங்களுக்கு புகார் வந்தால், மேலும் இரண்டு உறுப்பினர்களை கமிட்டியில் சேர்ப்போம்” என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

9. பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா

நிலை: உள் புகார்கள் குழுவில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்

பதில்: "நாங்கள் அதை பரிசீலித்து சரிசெய்வோம்" என்று தலைவர் எஸ் பாலசுப்ரமணியம் கூறினார்

10. இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI)

நிலை: உள் புகார்கள் குழுவில் வெளிப்புற உறுப்பினர் இல்லை (மஞ்சுஷா கன்வார் வெளிப்புற மற்றும் உள் உறுப்பினராகக் கருதப்படுகிறார்)

பதில்: “மஞ்சுஷா கன்வார் பேட்மிண்டன் சங்கத்தின் ஒரு பகுதியாக இல்லை. ஆனால் அவர் பேட்மிண்டன் சங்கத்தின் தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார். எனவே, கூட்டமைப்பின் பெண் உறுப்பினர் மட்டுமே உள் புகார்கள் குழுவின் தலைவராக இருக்க முடியும் என்று விதிக்கப்பட்ட அளவுகோல்களுக்கு அவர் பொருந்துகிறார்” என்று பொதுச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா கூறினார்.

11. இந்திய வில்வித்தை சங்கம்

நிலை: உள் புகார்கள் குழுவில் வெளிப்புற உறுப்பினர் இல்லை

பதில்: "விளையாட்டில் இருந்து சிறந்த நபர்களை தேர்வு செய்ய நாங்கள் விரும்பினோம், ஏனெனில் இது மிகவும் தீவிரமான குழு. தற்போது, ​​நாங்கள் வெளிப்புற உறுப்பினரைச் சேர்க்கவில்லை, ஆனால் ஒருவரைச் சேர்ப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று பொதுச் செயலாளர் பிரமோத் சந்தூர்கர் கூறினார்.

12. இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு

நிலை: உள் புகார்கள் குழுவில் வெளி உறுப்பினர் இல்லை. கூட்டமைப்பைப் பொறுத்தவரை, முன்னாள் வீராங்கனை அனிதா பால் துரை கமிட்டியில் சுயேச்சை உறுப்பினராக உள் மற்றும் வெளி உறுப்பினராக கருதப்படுகிறார். இருப்பினும், விதிகளின்படி உறுப்பினர் குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவத்துடன் ஒரு சமூக சேவகராக இருக்க வேண்டும். உறுப்பினர் ஒரு அரசு சாரா அமைப்பு, பெண்கள் அதிகாரமளிக்கும் சங்கம் அல்லது வழக்கறிஞர்கள் போன்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒருவராக இருக்கலாம்.

பதில்: “சுயேச்சையான உறுப்பினர் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்பதே விதிக்கான எங்கள் விளக்கம். அனிதா தேசிய கூட்டமைப்பு அல்லது எந்த மாநில அலகின் ஒரு பகுதியும் அல்ல. அவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர், முன்னாள் கேப்டன் மற்றும் விளையாட்டு ஒதுக்கீட்டின் காரணமாக ரயில்வேயில் பணிபுரிகிறார். எனவே, எங்கள் கருத்துப்படி, நாங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறோம்,”என்று பொதுச் செயலாளர் சந்தர் முகி ஷர்மா கூறினார்.

13. இந்திய டிரையத்லான் கூட்டமைப்பு

நிலை: உள் புகார்கள் குழுவில் வெளி உறுப்பினர் இல்லை

பதில்: பலமுறை அழைப்பு விடுத்தும், தலைவர் சுரேகா ராமச்சந்திரன் கருத்து தெரிவிக்க கிடைக்கவில்லை. துணைத் தலைவர் ராகேஷ் குப்தா நான்காவது உறுப்பினர் இருப்பதாகக் கூறினார், இருப்பினும் அவர் உறுப்பினரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

14. இந்திய படகு சங்கம்

நிலை: உள் புகார்கள் குழுவில் வெளி உறுப்பினர் இல்லை

பதில்: "எங்கள் கொள்கையின்படி, ஒரு பெண்மணியாக இருக்கும் ஒரு வெளி உறுப்பினர், தேவைப்படும் போது குழுவில் இணைந்து கொள்ளப்படுவார்" என்று இணைச் செயலாளர் கேப்டன் ஜிதேந்திர தீட்சித் கூறினார்.

15. இந்திய கயாக்கிங் மற்றும் கேனோயிங் சங்கம்

நிலை: உள் புகார்கள் குழுவில் வெளி உறுப்பினர் இல்லை

பதில்: “எங்களிடம் வழக்கறிஞர்கள் குழு உள்ளது. தேவைக்கேற்ப, அவர்களை கமிட்டியில் சேர்த்து, அவர்களின் சட்ட ஆலோசனையைப் பெறுகிறோம். கடினமான பட்ஜெட்டில் இயங்கும் எங்களைப் போன்ற ஒரு கூட்டமைப்பிற்கு, இது நிதி ரீதியாக கடினமான விஷயம், ”என்று தலைவர் பிரசாந்த் குஷ்வாஹா கூறினார்.

16. இந்திய பளு தூக்கும் கூட்டமைப்பு

நிலை: இது இரண்டு குழுக்களைக் கொண்டுள்ளது: மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உள் புகார்கள் குழு மற்றும் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு, ஆனால் எதிலும் வெளிப்புற, சுயாதீன உறுப்பினர் இல்லை.

பதில்: “சபீனா யாதவ் உத்திரபிரதேச பளுதூக்குதல் சங்க தலைவராக உள்ளார். பால் சிங் சந்து துரோணாச்சார்யா விருது பெற்றவர், ஆனந்தே கவுடா கர்நாடக கூட்டமைப்பைச் சேர்ந்தவர் மற்றும் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் ஆவார். (மூவரும் PoSH கமிட்டி உறுப்பினர்கள்). எல்லோரும் விளையாட்டிற்குள் இருந்து வந்தவர்கள், வெளியாட்கள் இல்லை. எங்களுக்கு புகார் வந்தால், அது இரு குழுக்களுக்கும் அனுப்பப்படும், ”என்று பொருளாளர் நரேஷ் சர்மா கூறினார்

தற்செயலாக, இந்திய பவுலிங் சம்மேளனத்திடம் உள் புகார்கள் குழு அல்லது அதுபோன்ற எந்த ஒரு பொறிமுறையைப் பற்றியும் பொதுவில் கிடைக்கக்கூடிய பதிவுகள் எதுவும் இல்லை. இதுபற்றி கேட்டபோது, ​​அதன் பொதுச்செயலாளர் லோகிந்தர் சிங், தங்களிடம் ஒரு குழு இருப்பதாகக் கூறினார் ஆனால் எந்த விவரங்களையும் வழங்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Sexual Harassment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment