/indian-express-tamil/media/media_files/2025/08/10/ec-says-in-response-to-adr-plea-2025-08-10-15-15-44.jpg)
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள்... விவரங்களை வெளியிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவது சட்டப்படி கட்டாயமில்லை எனத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிடக் கோரி தொடுக்கப்பட்ட மனுவை எதிர்த்து தேர்தல் ஆணையம் இந்தப் பதிலை அளித்துள்ளது.
பீகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஒருமாத காலமாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிறைவு செய்தது.
இதையடுத்து, ஆக.1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 7.89 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், வரைவுப் பட்டியலில் 7.24 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றனர். மீதமுள்ளவர்கள் இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் அல்லது பல இடங்களில் பதிவு செய்தவர்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வழங்கப்பட்ட படிவங்களை முறையாக பூா்த்தி செய்யவில்லை எனக் கூறி 65 லட்சம் வாக்காளா்களின் பெயரை நீக்கியதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் ஆணையம் சனிக்கிழமை இரவு தாக்கல் செய்த பதிலில், வாக்காளர்கள் பதிவு விதிகள், 1960-ஐ மேற்கோள் காட்டியுள்ளது. அதன்படி, வரைவுப் பட்டியலின் நகல் தேர்தல் பதிவு அதிகாரியின் (ERO) அலுவலகத்திற்கு வெளியே ஆய்வுக்கு வைக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வரைவுப் பட்டியலை பொதுமக்கள் பார்க்கும்படி செய்ய வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சிக்கும் இரண்டு நகல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
"மனுதாரர் கூறியுள்ள கடமைகளை ஆணையம் நிறைவேற்றியுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாதவர்களின் பெயர்கள் கொண்ட தனிப்பட்டியலைத் தயாரிப்பதற்கோ அல்லது வெளியிடுவதற்கோ சட்ட விதிமுறைகள் எதையும் விதிக்கவில்லை" என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், சட்டமோ அல்லது வழிகாட்டுதல்களோ இதுபோன்ற பட்டியலைத் தயாரிப்பதற்கோ அல்லது பகிர்வதற்கோ வழிவகை செய்யவில்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6-ஐ செப்.1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. "வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், இறந்தவர்கள் இல்லை, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் இல்லை, அல்லது கண்டறிய முடியாதவர்கள் இல்லை என்று உறுதிப்படுத்தும் வகையில், படிவம் 6-ஐ ஒரு பிரகடனத்துடன் சமர்ப்பிக்கலாம்" என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. வாக்காளர்களுக்கு உதவ 2.5 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.