குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறாவது வரிசையில் அமர்த்தப்பட்டது, அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அரசிடமிருந்து அனுப்பப்பட்ட குடியரசு தின அழைப்பிதழில், அவருக்கு 4-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ராகுல் காந்தி 6-வது வரிசையில் அமர்த்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6-வது வரிசை என்பது பொதுமக்கள் அமரும் இடத்திற்கு மிக நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் அமர்ந்திருந்தார். அவர்களுடன், ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதனிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடன் முன்வரிசையில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக அரசால் வேண்டுமென்றே ராகுல் காந்தி 6-ஆம் வரிசையில் அமர்த்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எப்போதும் முதல் வரிசையிலேயே அமருவார் என்பது குறிப்பிடத்தக்கது.