NRC across country : தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டு, 19 லட்சம் மக்கள் இந்திய வம்சாவளிகள் இல்லை என்றும் அவர்கள் வங்கத்தினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில குடும்பங்களில் பெற்றோர்கள் இந்தியர்களாக இருக்க அவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டினராக கணக்கிடப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பல்வேறு தரப்பில் இருந்தும் அம்மக்களைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
NRC across country
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தற்போது செயல்பாட்டில் இருக்கும் அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்று நாடு முழுவதிலுமாக குடியுரிமைப் பதிவேடு முறை செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதன் மூலம், இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியிருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நீங்கள் இங்கிலாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சென்று இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக குடியேற இயலுமா? அங்கேயே தங்கிக் கொள்ள இயலுமா? முடியாது தானே? அப்போது இந்தியாவில் மட்டும் ஏன் இதனை நாம் அனுமதிக்க வேண்டும். ஒரு நாடு இப்படி இயங்கக் கூடாது. இந்திய குடிமக்கள் குறித்த அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். எங்களின் தேர்தல் அறிக்கையில் அஸ்ஸாமில் மட்டும் இப்படி சட்டத்திற்கு புறம்பானவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று நாங்கள் அறிவிக்கவில்லை. இந்திய மக்கள் அனைவருக்கும் இது போன்ற சட்டத்தினை உண்டாக்குவோம் என்று நாங்கள் அறிவித்திருந்தோம் என்று கூறினார் அமித் ஷா.
இது தேசிய குடியுரிமைப் பதிவேடு என்று தான் அழைக்கப்படுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தவர்களுக்கான குடியுரிமைப் பதிவேடு என்று எங்கும் மேற்கோள் காட்டவில்லை என்றும் அவர் கூறினார். என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெற்றவர்களை முறையான வகையில், சட்ட நடவடிக்கைகள் எடுத்த பின்பு நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.