தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் நாடு முழுவதும் மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று போராட்டம் நடைபெற்றது.
இதனால் திரையரங்கில் வெளியாக சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள பி.வி.ஆர் - மால் திரையரங்கில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையிலிருந்து இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் சாலையில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படத்தை திரையிடக் கூடாது என்றும் அதற்கு துணை போகும் புதுச்சேரி அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் போராட்டக்காரர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த திரைப்படம் பி.வி.ஆர் திரையரங்கில் திரையிடப்படாது என்று போலீசார் அளித்த உத்தரவின் பேரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் திரையரங்கை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் திரையரங்கம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இன்று திரையிடப்படுவதாக இருந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திரையரங்குகள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் தமிழகத்தில் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் படம் வெளியான நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, படத்திற்கு வரவேற்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டி மல்டி பிளக்ஸ் திரையரங்கு நிர்வாகங்கள் இன்று முதல் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என அறித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“