Advertisment

யார் இந்த நூபுர் ஷர்மா? பா.ஜ.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்?

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து; பா.ஜ.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேசிய செய்தி தொடர்பாளர், நூபுர் ஷர்மா என்பவர் யார்?

author-image
WebDesk
New Update
யார் இந்த நூபுர் ஷர்மா? பா.ஜ.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்?

Abhinav Rajput 

Advertisment

Nupur Sharma: The BJP firebrand facing party axe: நூபுர் ஷர்மா லைம்லைட்டில் இருந்து விலகி இருப்பது அரிது. ஞாயிற்றுக்கிழமை, பா.ஜ.க அதன் தேசிய செய்தித் தொடர்பாளரான  நூபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்தது, மேலும் அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதாக தெரிவித்தது. கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி செய்தி விவாதத்தின் போது முகமது நபியைப் பற்றிய தனது கருத்துக்கள் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக மும்பை காவல்துறை நூபுர் ஷர்மா மீது எஃப்ஐஆர் பதிவு செய்த ஒரு வாரத்திற்கு பின்னர் பா.ஜ.க தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நூபுர் ஷர்மா மற்றும் வெளியேற்றப்பட்ட டெல்லி ஊடக பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் கருத்துக்களால் அரபு நாடுகளின் பின்னடைவை இந்தியா எதிர்கொள்கிறது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை, பா.ஜ.க நபிகள் நாயகம் சர்ச்சையிலிருந்து தன்னைத்தானே ஒதுக்கிக்கொண்டது, அதன் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், "எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பா.ஜ.க கடுமையாக எதிரானது" என்று கூறினார். மேலும், “பாஜக அப்படிப்பட்டவர்களையோ அல்லது சித்தாந்தத்தையோ ஊக்குவிப்பதில்லை” என்றும் அவர் கூறினார்.

ட்விட்டரில், நூபுர் ஷர்மாவை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரிராஜ் சிங், மற்றும் பூபேந்திர யாதவ்; பா.ஜ.க.,வின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா; எம்.பி.க்கள் மனோஜ் திவாரி, கவுதம் கம்பீர், மற்றும் பர்வேஷ் வர்மா; மற்றும் பா.ஜ.க.,வின் டெல்லி தலைவர் ஆதேஷ் குப்தா மற்றும் டெல்லி பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா ஆகியோர் பின்தொடர்கின்றனர்

ராசா அகாடமியின் மும்பை பிரிவின் இணை செயலாளர் இர்பான் ஷேக்கின் புகாரின் அடிப்படையில் மே 28 அன்று மும்பையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஞானவாபி விவகாரம் குறித்த செய்தி விவாதத்தில் நூபுர் ஷர்மா, நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவதூறாகவோ அல்லது "தவறாகவோ" எதுவும் கூறவில்லை என்று நூபுர் ஷர்மா மறுத்தாலும், சர்ச்சை வெடித்ததில் இருந்து தனக்கு கொலை மற்றும் பாலியல் அச்சுறுத்தல்கள் வர ஆரம்பித்ததாக நூபுர் ஷர்மா கூறியுள்ளார்.

தில்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டமும், பல்கலைக்கழக சட்ட கல்லூரியில் LLB பட்டமும் பெற்றுள்ள 37 வயதான நூபுர் ஷர்மா, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சட்ட படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

நூபுர் ஷர்மா ஒரு மாணவர் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கினார், 2008 இல், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் பதவியை வென்றார். காங்கிரஸின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) பல்கலைக்கழக வளாகங்களில் வலுவாக இருந்த காலம் அது. இருப்பினும் நூபுர் ஷர்மா தலைவர் பதவியை வென்றார், ஆனால், மற்ற எல்லா பதவிகளையும் NSUI வென்றது. இருப்பினும், தேர்தல் போட்டிகளில் நூபுர் ஷர்மாவின் மிகப் பெரிய போட்டி 2015 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை புது தில்லி தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டது தான். அந்த தேர்தலில் நூபுர் ஷர்மா 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பா.ஜ.க.,வின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் முக்கிய முகமாக இருந்த நூபுர் ஷர்மா, இளைஞர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் டெல்லி மாநில செயற்குழு உறுப்பினர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார். 2017 ஆம் ஆண்டில், அப்போதைய மாநில பிரிவுத் தலைவர் மனோஜ் திவாரி தனது அணியை உருவாக்கியபோது அவர் டெல்லி பா.ஜ.க.,வின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

"நூபுர் ஷர்மா டெல்லி அணியில் இருந்தபோதிலும், அவரது சட்ட ரீதியான புத்திசாலித்தனம், தேசிய பிரச்சினைகளில் சிறந்த அறிவு மற்றும் இருமொழி திறன்கள் போன்றவை தேசிய பிரச்சனைகள் பற்றிய தொலைக்காட்சி விவாதங்களில் அவரை பங்கேற்கச் செய்தது" என்று டெல்லி பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: ஆர்.ஜே.டி கட்சியின் ஆதிக்க சக்தியாக தேஜஸ்வி; அரசியலில் இருந்து ஒதுக்கப்படும் தேஜ் பிரதாப்

இறுதியில், செப்டம்பர் 2020 இல், ஜே.பி.நட்டா தனது தேசிய அளவிலான குழுவை அமைத்தபோது, ​​நூபுர் ஷர்மா தேசிய செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். "அவர் சில சமயங்களில் எல்லை மீறிச் சென்றாலும், தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றும் பெரும்பாலான மக்களுக்கு இது நடக்கும். அதுதான் மேடையின் இயல்பு” என்கிறார் மற்றொரு பா.ஜ.க தலைவர். ஏப்ரல் 2019 இல், ஆசம் கான் பற்றிய தொலைக்காட்சி விவாதத்தின் போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், குழு உறுப்பினர்களில் ஒருவரின் பெயரை நூபுர் ஷர்மா அழைத்தார்.

சமீபத்தில், நூபுர் ஷர்மா கடந்த வாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் “இவை ஆன்லைனில் பரப்பப்பட்ட பல எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள். மற்றொரு வீடியோவில் என்னை ஆபாசமானவர், முட்டாள் மற்றும் சிறுபிள்ளை என்று அழைத்தனர். மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தை இறுதி முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் நாகரீகத்துடன் விவாதிக்கப் போகிறோமா அல்லது ஷரியா சட்டங்களைத் திணிக்க அனுமதிக்கப் போகிறோமா?” என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, நூபுர் ஷர்மா நிபந்தனையின்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வாபஸ் பெற்றார் மற்றும் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment