கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து, மற்றொரு பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைகுரிய வகையில் ட்வீட் செய்திருந்தார். பாஜக பிரமுகர்களின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.
இப்பிரச்சினை விஸ்வரூபம் அடைய, இருவரும் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இருப்பினும், ஆளும் கட்சி தலைவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வளைகுடா நாடுகள், இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனது.
சர்ச்சைப் பேச்சு பேசிய நூபுர் சர்மா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி காவல் துறை சிறப்புப் பிரிவு ஜூன் 8 பதிவு செய்த எஃப்ஐஆரில், நவீன் குமார் ஜிண்டால், பத்திரிக்கையாளர் சபா நக்வி, இந்து மகாசபா நிர்வாகி பூஜா ஷகுன் பாண்டே, மௌலானா முப்தி நதீம், அமைதிக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷதாப் சவுகான் உள்ளிட்ட 8 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், மற்றொரு எஃப்ஐஆரில், நுபர் சர்மா உட்பட பிற சமூக வலைதள பயனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உளவுத்துறை இணைவு மற்றும் மூலோபாய செயல்பாடுகள் (IFSO) பிரிவினர், அவர்களது சமூக ஊடக பதிவுகளை கண்காணித்து வந்ததில், மதம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
IFSO-வின் DCP மல்ஹோத்ரா கூறுகையில், வெறுக்கத்தக்க செய்தி பரப்புபவர்கள், பல்வேறு குழுக்களைத் தூண்டிவிட்டு பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.
எஃப்ஐஆரில் அப்துர் ரஹ்மான், குல்சார் அன்சாரி மற்றும் அனில் குமார் மீனா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
சமீபத்தில், அலிகார் காவல் துறையும் சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்த இந்து மகாசபா அலுவலகப் பொறுப்பாளர் பூஜா ஷகுன் பாண்டே மீது எஃப்ஐஆர் பதிவு செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil