Advertisment

மாறிய ஓ.பி.சி ஒதுக்கீடு நிலைப்பாடு: மாநிலங்களவையில் நிறைவேறும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா

கடந்த 2010ல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி) தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Women Reservation Bill sail through Rajya Sabha

2008ல் 12 மாநிலங்களவை  எம்.பி.க்களையும், 2010 இறுதிக்குள் 18 ராஜ்யசபா எம்.பி.க்களையும் பெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு இன்று ஒரு மாநிலங்களவை எம்.பி. கூட இல்லை.

Rajya Sabha | parlimanet-of-india: புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று முன்தினம் செயல்பாட்டுக்கு வந்தது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது காரசார விவாதம் நடந்தது. பின்னர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. 

Advertisment

மசோதாவுக்கு ஆதரவாக 454 எம்.பி.க்கள் ஓட்டு போட்டனர். எதிராக 2 எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர். எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேறியது. இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று மகளிர் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக மேல் சபையில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு அவை நிறைவேற்றப்பட உள்ளது.

கடந்த 2010ல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி) தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. இதனையடுத்து மக்களவையில் நேற்று புதன்கிழமை,  சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎ.ஸ்.பி) அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு எச்சரிக்கையுடன் ஆதரவளித்தன.

“நாங்கள் மசோதாவுக்கு வாக்களித்தோம், ஆனால் கேள்விகளுடன். ஓ.பி.சி கோட்டா, சிறுபான்மையினர் ஒதுக்கீடு மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒதுக்கீட்டை தாமதப்படுத்தியதற்காக நாட்டின் பெண்கள் அரசாங்கம் மீது நடவடிக்கை எடுப்பார்கள்."என்று சமாஜ்வாடி கட்சியின் மக்களவை எம்.பி எஸ் டி ஹசன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். 

ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன், மாநிலங்களவையில் இதேபோன்ற மசோதாவை நிறைவேற்றியபோது, ​​காட்சி வேறு விதமாக இருந்தது. சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்களான நந்த்கிஷோர் யாதவ் மற்றும் கமல் அக்தர் தலைவர் ஹமீத் அன்சாரியின் மேஜை மீது ஏறி, அங்கிருந்த மைக்கை பிடுங்கினார். இவர்களுடன் அக்கட்சியின் எம்.பி வீர்பால் சிங் யாதவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இன்று சமாஜ்வாடி கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ், 2010 ஆம் ஆண்டின் எதிர்ப்பின் நிலைப்பாட்டை எச்சரிக்கையுடன் ஆதரிப்பதன் மூலம் மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. அன்றிலிருந்து ராஜ்யசபாவின் பெரும்பகுதி மாறினாலும், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் சுக்லா, பிரகாஷ் ஜவடேகர், ஜி.கே வாசன், பிரேந்திர பிரசாத் பைஷ்யா, புவனேஷ்வர் கலிதா, புருஷோத்தம் ரூபாலா மற்றும் ராம் கோபால் யாதவ் உட்பட சில எம்.பி.க்கள் மேல்-சபை உறுப்பினர்களாக உள்ளனர்.

அந்த நேரத்தில் பா.ஜ.க இந்த மசோதாவை ஆதரித்தது, மறைந்த அருண் ஜெட்லி தனது கட்சியை விவாதத்தில் வழிநடத்தினார். மசோதாவை ஆதரித்த அருண் ஜெட்லி, அன்றைய தினம், சரித்திரம் படைப்பதில் பங்கேற்பேன் என்று சபைக்கு வரும்போது தனக்கு ஒரு உணர்வு இருப்பதாகக் கூறினார். காங்கிரஸ் சார்பில் ஜெயந்தி நடராஜன் மற்றும் சி.பி.எம் உறுப்பினர் பிருந்தா காரத் ஆகியோர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

1931 ஆம் ஆண்டு முதல் ஜாதிவாரி  கணக்கெடுப்பு மற்றும்  ஓ.பி.சி மக்கள் தொகை குறித்த தரவு எதுவும் இல்லாத நிலையில். மசோதாவுக்குள் ஓ.பி.சி-க்களுக்கான துணை ஒதுக்கீட்டைக் கொண்டிருப்பது கடினம் என்று அப்போதைய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை  அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:- OBC winds change, Women’s Reservation Bill set to sail through Rajya Sabha

மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியும், மசோதாவை ஆதரித்து, பெண்கள் ஒதுக்கீட்டிற்குள் ஓ.பி.சி ஒதுக்கீட்டிற்காக போராடுகின்றனர்.

2010ல், மசோதா நிறைவேற்றப்பட்டதால், மாநிலங்களவையில் பதற்றம் மற்றும் குழப்பம் ஏற்பட்டது. அப்போது தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பா.ஜ.க எம்.பி பல்பீர் பஞ்ச்  “ஒரு ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்.ஜே.டி) எம்.பி கண்ணாடி டம்ளரை உடைத்தது எனக்கு நினைவிருக்கிறது, சில நிமிடங்கள் பதற்றம் நிலவியது. சுமார் அரை டஜன் மார்ஷல்கள் அவரை தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. தலைவர் ஹமீது அன்சாரி சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தார். அன்றைய தினம் சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் அவையில் இருந்து நீக்கப்பட்டனர்.

2010 இல் ஐக்கிய ஜனதா தள எம்.பி-யாக இருந்த சிவானந்த் திவாரி, மாநிலங்களவையில் மசோதாவை ஆதரித்ததை நினைவு கூர்ந்தார். “எங்கள் கட்சியில், முதல்வர் நிதீஷ் குமார் மசோதாவை ஆதரித்தார். அதே நேரத்தில் மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவரான சரத் யாதவ், அதற்கு எதிர்ப்பாளராக இருந்தார். அதனால், எம்.பி.,க்கள் குழப்பம் அடைந்தனர். வாக்கெடுப்புக்கு முன் நடந்த கட்சிக் கூட்டத்தில், மூத்த தலைவர் ராம் சுந்தர் தாஸ் இரு தலைவர்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், தவறினால் கட்சி மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தேன். ஷரத் ஜி உடனிருந்து அமைதியாக இருந்தார். எனவே, எந்த தீர்மானமும் எடுக்கப்படாததால், நாங்கள் மசோதாவை ஆதரித்தோம்." என்றார். 

மேல்சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சுஷ்மா ஸ்வராஜ், பிருந்தா காரத் மற்றும் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்தனர். லாலு பிரசாத், முலாயம் சிங் யாதவ் மற்றும் ஷரத் யாதவ் ஆகியோர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே உள்ள மகாத்மா காந்தியின் சிலை முன்பு ஒரு திடீர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அங்கு எம்.பி.க்கள் அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் ஓ.பி.சி பெண்கள் மசோதாவால் பயனடையவில்லை என்பது குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். அதன் பிறகு ராஜ்யசபா அமைப்பு கடுமையாக மாறியுள்ளது. 2010-ல் 71 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் மேலவையில் தனிப் பெரிய கட்சியாக இருந்தது.

பா.ஜ.க மிகவும் பின்தங்கியிருந்தது, 2008ல் 44 இடங்களுடன் அது 2010 இறுதியில் 51 ஆக உயர்ந்தது. இன்று, மேல்சபையில் பா.ஜ.க 94 உறுப்பினர்களுடன் மிகப்பெரிய கட்சியாகவும், காங்கிரஸ் 30 ஆகவும் குறைந்துள்ளது. திரிணாமுல் காங்கிரசுக்கு 2010ல் இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே அப்போது இருந்தனர். ஆனால் இப்போது 13 பேர் உள்ளனர். 2010ல் இல்லாத ஆம் ஆத்மி கட்சிக்கு ராஜ்யசபாவில் 10 எம்.பி.க்கள் உள்ளனர்.

2008ல் 12 மாநிலங்களவை  எம்.பி.க்களையும், 2010 இறுதிக்குள் 18 ராஜ்யசபா எம்.பி.க்களையும் பெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு இன்று ஒரு மாநிலங்களவை எம்.பி. கூட இல்லை. அப்போது இல்லாத ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்கு, இப்போது மேல்சபையில் 9 எம்.பி.க்கள் உள்ளனர்.

2008ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 எம்பிக்கள் இருந்தனர். 2010 ஆம் ஆண்டின் இறுதியில் அந்த எண்ணிக்கை 13 ஆகக் குறைந்தது - இப்போது வெறும் 5 பேர் மட்டுமே உள்ளனர். தெலுங்கானாவில் மாநில அந்தஸ்து கோரிக்கையின் பின்னணியில் எழுந்த பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) இன்று ஏழு எம்.பி.க்களைக் கொண்டுள்ளது, ஆனால் 2010ல் அந்த கட்சிக்கு ஒரு எம்.பி கூட இல்லை.

தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி), ஆர்.ஜே.டி போன்ற கட்சிகள் முன்னிலையில் அன்றைக்கும் இன்றைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் மட்டுமே உள்ளது. இருப்பினும், ராஜ்யசபாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஓரளவு உயர்ந்துள்ளது. இன்று, மேல்சபை பலத்தில் 13.02 சதவீதம் பெண்கள் உள்ளனர். 2008 மற்றும் 2010 க்கு இடையில், சதவீதம் 9.79 சதவீதத்திலிருந்து 11.15 சதவீதமாக மாறியுள்ளது குறிபிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Rajya Sabha Parlimanet Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment