சுடுகாடு வரை துரத்திய ஜாதி! தனி ஆளாக தாயை சுமந்தே சென்று அடக்கம் செய்த மகன்!

இது யார் என்று கேட்டவர்களுக்கு, குரல் உடைந்து, ’என் அம்மா’ என்று பரிதாபமாகச் சொல்லிவிட்டு சென்றுள்ளார் சரோஜ்

சாதிக் கொடுமை காரணமாக, இறந்த தனது அம்மாவின் உடலை தனியாளாக சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம், ஒடிசாவில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா (45). கணவர் இறந்த பின் தனது 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். நேற்று முன் தினம் தண்ணீர் எடுக்க சென்ற ஜானகி, தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய சரோஜ் முயன்றார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டும், யாரும் முன்வரவில்லை. அவர் தாழ்ந்த சாதி என்பதால் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

மனம் தளராத சரோஜ், அம்மாவின் உடலை சைக்கிளின் பின்னால் வைத்தார். பேலன்ஸ் செய்வதற்காக இரண்டு கம்புகளை, சைக்கிளின் இரு பக்கமும் பொருத்தி, அதன்மேல் மரக்கட்டையை வைத்து அம்மாவின் உடலை கிடத்தினார். பின், தன் தலையில் ஒரு துண்டை போட்டுக் கொண்டு நான்கைந்து கி.மீ நடந்தே உடலை காட்டுக்குக் கொண்டு சென்றார். போகிற வழியில், இது யார் என்று கேட்டவர்களுக்கு, குரல் உடைந்து, ’என் அம்மா’ என்று பரிதாபமாகச் சொல்லிவிட்டு சென்றுள்ளார் சரோஜ். பிறகு யார் உதவியும் இன்றி தனியாளாக காட்டுக்குள் அவரை அடக்கம் செய்துவிட்டு வந்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close