தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தல்களில் போட்டியிடுவதை நிராகரித்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கட்சியின் தேர்தல் வியூகத்தை மேம்படுத்த அவர் உதவுவார் என்று அக்கட்சியின் உள்ளே இருப்பவர்கள் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Amid speculation, Naveen aide V K Pandian makes it clear: ‘Won’t contest polls’
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய நண்பர் வி.கே. பாண்டியனின் அரசியல் எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு மத்தியில், வரும் ஏப்ரல்-மே 2024-ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் அவர் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்தினார். வி.கே. பாண்டியன் என்கிற வி. கார்த்திகேய பாண்டியன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மதுரை மேலூரில் பிறந்தவர். டெல்லியில் மேல்படிப்பை முடித்துவிட்டு யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று, 2000-களி ஒடிசாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். நவீன் பட்நாயக்கின் நம்பிக்கையான அதிகாரியாக உயர்ந்தார்.
வி.கே பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்றபின், நவம்பர் 27-ம் தேதி பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைதார். வெள்ளிக்கிழமை (15.12.2023) நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வி.கே. பாண்டியன் கலந்து கொண்டார். பாண்டியன் தனது முதல் கட்சி கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். பி.ஜே.டி துணைத் தலைவர் தேவி பிரசாத் மிஸ்ரா கூறுகையில், “ஒடிசா மக்களுக்கு சேவை செய்ய” தான் கட்சியில் சேர்ந்தேன் என்றும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாண்டியன் தெளிவாகக் கூறிவிட்டார். அவர் போட்டியிட முடிவு செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய மிஸ்ரா, வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.
“கார்த்திகேய பாண்டியன் (பி.ஜே.டி தலைவர்களால் குறிப்பிடப்படுவது போல்) செயற்குழு கூட்டத்தில் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். மேலும், 2024 தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெளிவுபடுத்தினார், அதற்கு பதிலாக 147 பி.ஜே.டி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் போட்டியில் வெற்றிபெற உதவுவதாகக் கூறினார். ” என்று கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த பி.ஜே.டி தலைவர் கூறினார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கட்சியில் இணைந்த பிறகு, அவரது செயல்பாடு, தொகுதி தேர்வு, கட்சியில் பதவி மற்றும் அரசியல் எதிர்காலம் குறித்து பலத்த ஊகங்கள் எழுந்தன, இது கட்சி தொண்டர்களிடையே சில குழப்பங்களுக்கு வழிவகுத்தது. தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெறுவதற்கான கட்சியின் முயற்சிகளில் பாண்டியனின் செயல்பாடு வடிவமைக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் முதல்வரின் நெருங்கிய நம்பிக்கையாளர் என்பது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவர் முக்கியப் பங்கு வகித்து, கட்சியின் வெற்றிப் பாதையில் பங்களித்தால், தேர்தலுக்குப் பிறகு அவருக்கு முதல்வர் கட்சியின் உயர் பதவியை வழங்கலாம். தற்போதைக்கு, அவர் ஒரு உறுப்பினராக பணியாற்றுவார். கட்சியின் 2024 தேர்தல் வியூகத்தை மேம்படுத்த பட்நாயக்கிற்கு உதவுவார்” என்று பி.ஜே.டி தலைவர் கூறினார்.
பி.ஜே.டி கூட்டத்தில், பட்நாயக்கின் தலைமையைப் பாராட்டிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, கட்சியில் சேரும் அவரது முடிவை எடுக்க வைத்ததாகக் கூறினார். 77 வயதான முதல்வர் ஒடிசாவுக்காகவும் ஒடிசா மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் உழைப்பதைச் சுட்டிக்காட்டி, கட்சிக்காக முழு மனதுடன் உழைக்குமாறு பி.ஜே.டி தலைவர்களை பாண்டியன் வலியுறுத்தினார்.
2019 ஆம் ஆண்டு வரை கேமராவுக்கு போஸ்கொடுக்க தயங்கிய அதிகாரியாக அறியப்பட்டவர் வி.கே. பாண்டியன். நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றபோது, வி.கே. பாண்டியன் மார்ச் மாதம் பட்நாயக்கின் சார்பாக மாநிலத்தின் 147 சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து குறைகேட்புக் கூட்டங்களில் கலந்துகொண்டபோது, ஒரு அரசியல் பாத்திரத்தை ஏற்றார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த நடைமுறை 6 மாதங்களாகத் தொடர்ந்தது.
அக்டோபர் 23-ம் தேதி அவர் விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பம் மூன்றே நாட்களில் மையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு நாள் கழித்து, அவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன், பட்நாயக் அரசாங்கத்தின் முதன்மை முயற்சிகளான நபின் ஒடிசா (புதிய ஒடிசா) மற்றும் விஷன் 5T ஆகியவற்றின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
48 வயதாகும் வி.கே. பாண்டியன், நவீன் பட்நாயக்கின் சொந்த மாவட்டமான மயூர்பஞ்ச் மற்றும் கஞ்சம் போன்ற மாநிலத்தின் பெரிய மாவட்டங்களின் கலெக்டராக முத்திரை பதித்தார். இது ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் பட்நாயக்கின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணமாக இருக்கலாம். மே 2011-ல், அவர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக முதல்வரின் அலுவலகத்தில் இருந்தார். மேலும், அவர் ஓய்வு பெறும் வரை இந்த பதவியில் தொடர்ந்தார். அவரது சக அதிகாரிகளைப் போல இருந்தது இல்லை. அவர் ஒருபோதும் மத்தியப் பணிகளுக்கு சென்றதில்லை.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில், பொதுத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கான வியூகத்தை பி.ஜே.டி திட்டமிட்டது. மாநில அரசின் நலத்திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில், ஜனவரி 23 முதல் மார்ச் 5 (பிஜு பட்நாயக்கின் பிறந்தநாள்) வரை 40 நாள் களத்தில் மக்களை இணைக்கும் திட்டத்தை ஏற்பாடு செய்ய கட்சி முடிவு செய்துள்ளது.
மேலும், ஒடிசா மாநிலத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுப்பதாகவும், பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி அரசை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள மாட்டோம் என்ற சமிக்ஞையை அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய நவீன் பட்நாயக், “பி.ஜே.டி மிகவும் வெற்றிகரமான பிராந்தியக் கட்சி என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இது நாட்டின் மிக வெற்றிகரமான சமூக-பொருளாதார இயக்கம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்.” என்று கூறினார்.
ஒடிசாவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் முன்னோடியில்லாதது என்று கூறிய பட்நாயக், எதிர்க்கட்சிகளின் தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டும் என பி.ஜே.டி தலைவர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “கோயில் திட்டம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அல்லது நீர்ப்பாசனம் மற்றும் பிற துறைகள் எதுவாக இருந்தாலும், ஒடிசாவின் மாற்றத்தை நாடு காண்கிறது. எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதால் அது குறித்து தவறான தகவல்களைப் பரப்புவார்கள். ஒடிசாவின் மாற்றம் அவர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.