Odisha train tragedy News in Tamil: கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்தது.
அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் – ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். மேலும், 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 9000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ரயில் விபத்து நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகும், 82 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. உடல்களை அடையாளம் காண உதவும் டி.என்.ஏ அறிக்கை இன்னும் கிடைக்காததால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வீடு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
உடல்கள் வைக்கப்பட்டுள்ள புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அதிகாரிகள், கடந்த 48 மணி நேரத்தில் காத்திருக்கும் குடும்பங்களுக்கு அவற்றில் ஒன்றைக் கூட வழங்கவில்லை என்றும் பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டன என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எய்ம்ஸ் அதிகாரிகளை சந்தித்து அடையாளம் காணும் செயல்முறை குறித்து ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் "டி.என்.ஏ மாதிரி மட்டுமே அறிவியல் முறையில் அடையாளம் காண ஒரே வழி. இது தொடர்பாக நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்று கூறினார்.
இதனிடையே, எய்ம்ஸ் அதிகாரிகள் உடல்களின் டி.என்.ஏ ஆய்வு முடிந்துவிட்டதாகவும், மேலும் 50க்கும் மேற்பட்ட உறவினர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஓரிரு நாட்களில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
“பீகார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் இன்னும் உடல்களைக் கோர வருகிறார்கள். புகைப்படங்களிலிருந்து உடல்களை அடையாளம் காணும்படி அவர்களிடம் கேட்டுள்ளோம். டி.என்.ஏ பரிசோதனைக்காக அவர்களின் இரத்த மாதிரிகளை நாங்கள் சேகரித்து வருகிறோம். இது அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும், ”என்று எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
டி.என்.ஏ அறிக்கைகள் வந்த பிறகே உரிமை கோரப்படாத உடல்களை அப்புறப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். பீகாரின் மோதிஹாரியில் வசிக்கும் சுபாஷ் சஹானி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தவர்களில் ஒருவர். புகைப்படங்களில் இருந்து தனது சகோதரர் ராஜாவின் உடலை அடையாளம் கண்டுகொண்டதாக அவர் கூறினார்.
ராஜாவின் உடல் மேற்கு வங்காளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டையைக் கண்டுபிடித்ததைக் கூறிய குடும்பத்தினர் மீண்டும் அவர் புவனேஸ்வருக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். ஆனாலும், சுபாஷின் காத்திருப்பு ஓயவில்லை. "இது எனது இளைய சகோதரரின் உடல் என்று நாங்கள் அதிகாரிகளிடம் கூறியபோது, டி.என்.ஏ அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டனர்," என்று சுபாஷ் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.