ஒடிஷா மாநிலத்தில் தேவையான ஆவணங்கள் இல்லாததால், அரசு மருத்துவமனை சிகிச்சை தர மறுத்ததன் காரணமாக பழங்குடி பெண் ஒருவர் கழிவுநீர் கால்வாயில் குழந்தை பெற்றெடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்படும் சம்பவங்களும், அலட்சியங்களும் தொடர்கதையாகி வருகின்றன. இதனால், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அண்மையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், மேல்சிகிச்சைக்கு சென்னை செல்ப்வதற்காக ஆம்புலன்ஸ் தராததால், சிறுநீரகம் செயலிழந்த 10-ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது ஒடிஷாவில் பழங்குடி பெண் ஒருவர் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால், கழிவுநீர் கால்வாயில் குழந்தை பெற்றெடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஒடிஷா மாநிலம் கோரபுத் மாநிலத்தில் உள்ள சாஹித் லஷ்மன் நாயக் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், ஜானிகுடா கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள தன் கணவரை பார்க்க சென்றார்.
நிறைமாத கர்ப்பமாக இருந்த அப்பெண்ணுக்கு திடீரென மருத்துவமனையில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அப்பெண்ணை அனுமதிக்குமாறு உறவினர்கள் மகப்பேறு பிரிவில் சென்று கேட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்க தேவையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி, சிகிச்சையளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாக அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், அப்பெண் மருத்துவமனை அருகிலிருந்த கழிவுநீர் கால்வாயில் குழந்தை பெற்றெடுத்ததாக, அப்பெண்ணின் தாயார் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. அப்பெண் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது, குழந்தை பெற்றெடுத்ததாக மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி லலித் மோகன் ராத் தெரிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பெண் மருத்துவமனை ஊழியர்கள் யாரிடமும் விசாரிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
Odisha: Woman gave birth in drain near hospital's canteen in Koraput after doctors allegedly refused to check her due to lack of documents, now admitted. She was visiting her ailing husband there when she complained of labor pain. Hospital's superintendent refutes allegations pic.twitter.com/0dNZeJDQTv
— ANI (@ANI) 16 December 2017
இந்த செய்தி பரவவே, மருத்துவமனை நிர்வாகம் அப்பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அப்பெண்ணும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.