புதுச்சேரி பேருந்து நிலையம் ரூ.38 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதற்காக புதுச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள பஸ் நிறுத்தும் இடம் மற்றும் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை இடித்துவிட்டு புதிதாக கட்டடம் கட்டும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்கி கடையை உடனடியாக காலி செய்து கொடுக்க வேண்டும் என்று கடந்த 20 ஆம் தேதி நகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
ஆனால் 40 நாட்களுக்கு மேலாகியும் ஒரு சில கடைகள் மட்டுமே அகற்றப்பட்டு தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் கடை வைக்கப்பட்டது.
இதில் ஒரு ஒரு சில வியாபாரிகள் கடைகளை அகற்ற மறுத்து கடையை மூடிவிட்டு சென்றுவிட்டனர். இதனை அறிந்த நகராட்சி ஊழியர்கள் அந்த கடைக்கு சீல் வைத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
தற்போது புதிய பேருந்து நிலைய புதிய கட்டுமான பணி நடைபெற்று வருவதால் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு சிரமமாக உள்ளது.
இதனால், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது தகவல் அறிந்து வந்த வியாபாரிகள் கடைகளை அகற்ற நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் எதற்காக கடையை இடிக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாத் ஈடுபட்டனர். ஆனால் அதையும் மீறி கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“