முஸ்லீம் டிரைவருக்காக காரை கேன்சல் செய்தவருக்கு ஓலா கொடுத்த பதிலடி

முஸ்லீம் டிரைவர் என்பதால் ஓலாவை கேன்சல் செய்து, அதனைக் கருத்தாக ட்விட்டரில் பதிவு செய்த இளைஞருக்கு ஓலா நிர்வாகம் தக்க பதிலடி அளித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அபிஷேக் மிஷ்ரா என்ற இளைஞர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்தவர். தற்போது இவர் டெல்லியில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஓலா கேப் ஒன்றை புக் செய்தார். அதில் இவருக்குக் காரை ஓட்டும் டிரைவர் முஸ்லீம் நபர் என்று காட்டியுள்ளது. உடனே இவர் அந்தக் காரை கேன்சல் செய்துள்ளார்.

அது மட்டுமின்றி இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டார். அதில், “நான் ஓலா காரை கேன்சல் செய்துவிட்டேன். ஏனெனில் எனக்கு கார் ஓட்டும் டிரைவர் ஒரு முஸ்லிம். எனது பணத்தை ஒரு ஜிஹாத் நபருக்கு நான் கொடுக்க மாட்டேன்.” என்று வன்மையாகத் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்தக் கருத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவரின் இந்த எண்ணத்தையும், செயலையும் பலரும் கண்டித்து வந்தனர். இந்த ட்வீட்டிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து பதிலும் கொடுத்தனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, தற்போது ஓலா நிறுவனம் அபிஷேக் மிஷ்ராவுக்கு தக்கப் பதிலடியை அளித்துள்ளது. அதில் “நமது இந்திய நாட்டை போலவே ஓலா நிறுவனம் மதச்சார்பற்றது. நாங்கள் எந்த ஓட்டுநர் அல்லது பயணிகளையும் சாதி மற்றும் மதம் வேறுபாட்டுடன் பார்ப்பவர்கள் அல்ல. எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் சமமாக மதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.” என்று கூறியிருந்தனர்.

ஓலாவின் இந்தப் பதிலை பெரும்பாலானோர் வரவேற்று வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close