தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும், யூனியன் பிரதேசத்தில் இணைய வசதியை மீண்டும் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுகு செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.
ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், ஒமர் அப்துல்லாவுக்கு எதிரான பொது பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை நீக்கியதை அடுத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஸ்ரீநகர், குப்கார் சாலையிலுள்ள அவருடைய ஹரி நிவாஸ் இல்லத்தில் இருந்து 1.30 மணிக்கு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, 370வது பிரிவு குறித்தும் மாநிலத்தில் என்ன தொடர்ந்து நடந்தது என்பது குறித்தும் மற்றொரு சமயத்தில் பேசுவதாகக் கூறினார்.
370 வது பிரிவு திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2019, ஆகஸ்ட் 5-ம் தேதி ஒமர் அப்துல்லா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பிப்ரவரியில், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் “தனது வாக்காளர்களை அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கச் செய்யும்” திறனுக்காக அவருக்கு எதிராக கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தை பிரயோகித்தது.
இந்த 232 நாட்களில் முதல்முறையாக டுவிட் செய்த ஒமர் கூறுகையில், “இது ஆகஸ்ட் 5, 2019 அன்று இருந்த உலகத்திற்கு இது மிகவும் வித்தியாசமான உலகம்.” என்று அவர் தடுத்துவைக்கப்பட்டதை ரத்து செய்த அரசு உத்தரவுடன் தன்னைப் பற்றிய ஒரு புகைப்படத்தையும் இணைத்து டுவிட் செய்திருந்தார்.
அவர் எழுதிய 2வது டுவிட்டில் “கிட்டத்தட்ட 8 மாதங்களில் முதல்முறையாக என் அம்மா மற்றும் என் அப்பாவுடன் மதிய உணவு சாப்பிட்டேன். நான் சற்று திகைத்துப் போயிருந்தாலும், நான் சாப்பிட்டதை நினைவில் வைத்துக் கொள்ளாவிட்டாலும் ஒரு சிறந்த உணவை என்னால் நினைவில் கொள்ள முடியாது” என்று எழுதினார்.
அவரது தந்தையும் முன்னாள் முதல்வரும், லோக் சபா எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு ஒமரின் விடுதலை வந்துள்ளது. ஸ்ரீநகர் எம்.பி., ஆகஸ்ட் 5 முடிவுக்குப் பிறகு ஸ்ரீநகரில் குப்கர் சாலையில் உள்ள அவரது வீட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
விடுவிக்கப்பட்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “இன்று எனக்கு வார்த்தைகள் இல்லை. நான் இன்று சுதந்திரமாக இருக்கிறேன். இப்போது, நான் டெல்லிக்குச் சென்று நாடளுமன்றத்தில் கலந்துகொண்டு உங்கள் அனைவருக்காகவும் பேச முடியும்.” என்று கூறினார்.
மேலும் அவர், “அனைத்து தலைவர்களும் விடுவிக்கப்படும்போது இந்த சுதந்திரம் முழுமையடையும். அனைவரையும் விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
விடுதலையான ஒரு நாள் கழித்து, ஃபரூக் அப்துல்லா, ஹரி நிவாஸில் ஒமர் அப்துல்லாவை வந்து பார்த்தார். அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இது அவர்களின் முதல் சந்திப்பு ஆகும். ஃபரூக் உடன் அவரது மனைவி மோலியும் அவரது மகள் சஃபியா அப்துல்லா கான் ஆகியோர் இருந்தனர்.
முன்னாள் முதல்வர் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட பிற தலைவர்கள் இன்னும் காவலில் உள்ளனர்.