மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவின் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான், கடந்த நவம்பர் 24 ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வகை கொரோனா சில நாடுகளுக்கு பரவியதை அடுத்து, பல்வேறு நாடுகளும் விமான பயண கட்டுப்பாடுகளை அறிவித்தன.
இந்தியாவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவியது. இந்தியாவில் கர்நாடகாவில் இருவருக்கும், குஜாரத், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில், தற்போது மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் கொரோனாவின் ஓமிக்ரான் வகை தொற்று ஏழு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவின் லாகோஸைச் சேர்ந்த 44 வயதான பெண், நவம்பர் 24 அன்று பிம்ப்ரி-சின்ச்வாடில் தனது இரண்டு மகள்களுடன் தனது சகோதரனைப் பார்க்க வந்திருந்தார், அவர் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தேசிய வைராலஜி நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது. அவரது 45 வயதான சகோதரர் மற்றும் சகோதரரின் இரண்டரை வயது மற்றும் ஏழு வயது மகள்களுக்கும் ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணுக்கு மிகவும் லேசான அறிகுறிகள் உள்ளன, மற்ற ஐந்து பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், மற்ற மூவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூடுதலாக, புனேவில் 47 வயதான ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், மகாராஷ்டிராவின் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆகவும், இந்தியாவின் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆகவும் உயர்ந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil