Omicron cases only travel-related : நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் பிறழ்வு தொற்றுகள் அனைத்தும் பயணங்கள் தொடர்பானவை மட்டுமே. மருத்துவ ரீதியாக உள்நாட்டில் பரவி உள்ளது என்று பரிந்துரைக்கும் வகையில் க்ளஸ்டர்கள் ஏதும் உருவாகவில்லை என்று மகாராஷ்ட்ரா கோவிட்19 பணிக்குழு நிபுணர் டாக்டர் ஷ்ஷாங்க் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவில் இதுவரை 10 நபர்களுக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் புனே, 3 பேர் மும்பை நகரைச் சேர்ந்தவர்கள். மொத்தமாக 21 நபர்களுக்கு இந்தியாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து 9 நபர்கள், கர்நாடகாவில் 2 பேர், டெல்லி மற்றும் குஜராத்தில் தலா ஒரு நபருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்புகளை உறுதி செய்ய ஆப்பிரிக்க மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்ட லேசான அறிகுறிகளுக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு நீண்ட கால சரிபார்ப்பு தேவை என்று மருத்துவர் ஜோஷி கூறியுள்ளார்.
மாநில கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் பிரதீப் அவதே, மாதிரி அளவு மிகவும் சிறியதாக இருப்பதால் எந்த அனுமானத்தையும் எடுக்க முடியாது என்றார். ஒமிக்ரான் பரவல், தீவிரம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பித்துக் கொள்ளுதல் போன்ற இயக்க நிலையை புரிந்து கொள்ள குறைந்தது இரண்டு வாரங்களாவது தேவை என்றும் அவர் கூறினார்.
ஒமிக்ரான் பிறழ்வின் மருத்துவ ரீதியான அறிகுறிகள் இதற்கு முந்தைய கொரோனா பிறழ்வுகளில் இருந்து வேறுபட்டு உள்ளது. வாசனை மற்றும் சுவை போன்றவற்றை உணர இயலாத நிலை டெல்டா மாறுபாடுகளில் இருந்தது. ஆனால் அப்படியான அறிகுறிகள் ஏதும் ஒமிக்ரானில் நோயாளிகளால் பதிவு செய்யப்படவில்லை. மிதமான நோயின் அளவு எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியவில்லை. மருத்துவ ரீதியாக இது தொடர்பான முடிவுக்கு வர குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று ஜோஷி கூறினார்.
பொதுமக்கள் தேவையற்ற ஊகங்களை நம்புவதை தவிர்த்து சரியான சான்றுகள் வெளிவர அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர் ஜோஷி உட்பட பல நிபுணர்களும் மக்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். நம் நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டிருக்கும் ஒமிக்ரான் தொற்றுகள் அனைத்தும் பயணங்கள் தொடர்பானவை. தேவையற்ற பயத்திற்கு பொதுமக்கள் ஆளாக வேண்டாம். தென்னாப்பிரிக்காவின் அறிக்கைகளின்படி மருத்துவ முடிவுகள் இந்த தொற்று மிகவும் லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளது என்றும் பெரிய அளவில் கவலைக்குரிய அச்சுறுத்தலாக இது இல்லை என்றும் கூறுகின்றன என ஜோஷி தெரிவித்தார்.
டெல்டாவை விட இந்த மாறுபாடு வேகமாக பரவுகிறது என்பது இன்னும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட வழக்குகளும் உள்ளன. மைக்ரோ க்ளஸ்டர்களை நாம் அடையாளம் காண வேண்டும். இந்த தொற்றின் பரவலை தடுக்க கடுமையான அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும். உள்நாட்டிற்கு வரும் அனைவரையும் சோதித்தல், வழிகாட்டுதல்களை அவர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்தல் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை இது உள்ளடக்கியது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
புனேவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நபர் ஃபின்லாந்தில் இருந்து திரும்பி வந்த 47 வயது மதிக்கத்தக்கவர். அவருடன் தொடர்பில் இருந்த 35 நபர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அனைவருக்கும் நெகடிவ் முடிவுகள் வந்துள்ளன என்று புனே மருத்துவ கார்ப்பரேஷனில் துணை மருத்துவ அதிகாரியாக உள்ள மருத்துவர் சஞ்சீவ் வாவரே கூறியுள்ளார். வழிகாட்டுதல்களின் படி பாதிக்கப்பட்ட நபர் நாயுடு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பிம்ப்ரி-சின்ச்வாடில், மருத்துவ அதிகாரி லக்ஷ்மன் கோபனே, 44 வயது பெண்ணைத் தவிர மற்ற ஐந்து நோயாளிகளுக்கும் நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை என்று கூறினார். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 8 நாட்கள் கழித்து அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும். மரபணு பகுப்பாய்விற்காக 10 மாதிரிகள் அனுப்பப்பட்டு அவற்றின் முடிவுகளுக்காக காத்திருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் தனஞ்சய் கேல்கரைத் தொடர்பு கொண்டபோது, திங்களன்று நீண்ட காலமாக மருத்துவமனையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கோவிட் நோய்த்தொற்றுகள் (16) இருப்பதாகத் தெரிவித்தார். கோவிட்-பொருத்தமான நடத்தையை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil