சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் எம்.பியும், பிரபல தாதாவுமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அகமது ஆகியோர் நேற்று (சனிக்கிழமை) இரவு போலீஸ் பாதுகாப்புடன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜிக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது இருவரும் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த மர்ம நபர்கள் அதிக் அகமது மற்றும் அஷ்ரப் அகமது மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது அங்கு அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து விசாரணை செய்ய குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன் அதிக் அகமதுவின் 19 வயது மகன் ஆசாத் அகமது உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காவல்துறை மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், அதிக் மற்றும் அஷ்ரஃப் ஆகியோரின் வழக்கு விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, இருவரும் மீண்டும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, மருத்துவ சோதனைக்காக போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறினார்.
பிரயாக்ராஜ் போலீஸ் கமிஷனர் ரமித் சர்மா கூறுகையில், துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் செய்தியாளர்கள் போல வேடமிட்டு அங்கு வந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக் அகமது அகமதாபாத் சிறையில் இருந்து உத்தரப் பிரதேச சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இவரும் இவரது குடும்பத்தினரும் தாங்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி நீதிமன்றங்களில் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்தனர். உமேஷ் பால் கொலைவழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிக் அகமது உச்ச நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டினார்.
அதிக் அகமது அரசியல்வாதியும் ஆவர். 2004-ம் ஆண்டு உ.பியின் புல்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியில் போட்டியிட்டு
வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அதிக் அகமது மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அதிக் அகமது, மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி ஜான்சி அருகே மாநில அதிரடிப் படை போலீசார் நடத்திய எக்கவுண்டரில் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாவுதீன் ஓவைசி உள்ளிட்டோர் உ.பி அரசை கடுமையாக சாடி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.