உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இந்தியர்களை சேர்ப்பதற்காக மாணவர் விசாக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சி.பி.ஐ (CBI) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், மத்தியப் பிரதேசத்தில் நகராட்சி உறுப்பினராக (கவுன்சிலர்) இருக்கும் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவரின் மகன் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸூக்கு தெரியவந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: On CBI radar in Russia ‘war visa’ case: BJP corporator’s son, mystery office
குற்றம் சாட்டப்பட்ட சுயாஷ் முகுத்தின் தாயார் அனிதா முகுத் மத்திய பிரதேசத்தின் தார் நகராட்சி மன்றத்தில் பா.ஜ.க.,வின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. "அனிதா முகுத் முதல்முறையாக நகராட்சி உறுப்பினராக பதவியேற்றுள்ளார்" என்று தார் தலைமை நகராட்சி அதிகாரி (CMO) நிஷிகாந்த் சுக்லா கூறினார்.
கருத்துகளைப் பெற சுயாஷ் முகுத் மற்றும் அனிதா முகுத் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
குடும்பம் இந்தூரில் இருந்து வந்ததாகவும், சுயாஷின் தந்தை ரமாகாந்த் முகுத் உள்ளூர் மருத்துவமனையில் பொது மருத்துவராக பணிபுரிந்து வருவதால், குடும்பம் தார் நகரில் குடியேறியதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கருத்துக்களைப் பெற ரமாகாந்த் முகுத்தையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை.
தற்செயலாக, குடும்பத்தின் சமூக ஊடக கணக்குகளில் மூத்த பா.ஜ.க தலைவர்களுடன் பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
பா.ஜ.க.,வின் தார் மாவட்டத் தலைவர் மனோஜ் சோமானியை தொடர்பு கொண்டபோது, அனிதா முகுத் மகன் மீதான சி.பி.ஐ வழக்கு குறித்து அறிக்கைகள் மூலம் அறிந்ததாகக் கூறினார். "கடந்த ஆண்டு நான் (மாவட்ட தலைவராக) பொறுப்பேற்ற போது அனிதா முகுத் ஏற்கனவே நிகாம் பர்ஷாத் (நகராட்சி கவுன்சிலர்) ஆவார். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மட்டுமே என்னால் கூற முடியும்,'' என்று மனோஜ் சோமானி கூறினார்.
சி.பி.ஐ.,யின் கூற்றுப்படி, சுயாஷ் முகுத்தின் 24X7 RAS ஓவர்சீஸ் அறக்கட்டளை 180 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது, பெரும்பாலும் மாணவர் விசாவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் உள்ள சந்தேகத்திற்குரிய பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்காக இந்திய மாணவர்களை, ஏஜென்டுகள் ஏமாற்றியதாக சி.பி.ஐ எஃப்.ஐ.ஆரில் (FIR) குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் நிறுவனங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தூதரக ஊழியர்களின் பங்கும் விசாரணையின் கீழ் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
RAS ஓவர்சீஸின் இப்போது செயல்படாத இணையதளம் மூன்று தொலைபேசி எண்களைக் கொண்டுள்ளது, அவற்றில் ஒன்று, ஹரியானாவில் உள்ள பல்வாலைச் சேர்ந்த சுயாஷ் முகுத்தின் கூட்டாளி என்று சி.பி.ஐ எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள தனுகாந்த் ஷர்மாவுக்கு சொந்தமானது.
2019 இல் ட்விட்டரில் இணைந்ததில் இருந்து, தனுகாந்த் ஷர்மாவின் கணக்கு ‘சௌகிதார் தனுகாந்த் ஷர்மா’ என்ற தலைப்பில் ஒரு ட்வீட் கூட வெளியிடப்படவில்லை, மேலும் சுயாஷ் முகுத் மற்றும் இரண்டு “ரஷ்யாவின் வோரோனேஜ் அரசு மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள்” உட்பட நான்கு பின்தொடர்பவர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த "மாணவர்களில்" ஒருவர் தன்னை சிவசேனாவின் (ஜெய்ப்பூர்) மாவட்டத் தலைவர் என்று கூறினார். தற்செயலாக, சுயாஷ் முகுத் மற்றும் தனுகாந்த் சர்மாவின் சகோதரர் ரவிகாந்த், அவர்களின் சமூக ஊடக விவரங்களின் படி, ரஷ்யாவின் வோரோனேஜ் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்தனர்.
வோரோனேஜ் என்.என் பர்தென்கோ (Voronezh NN Burdenko) அரசு மருத்துவ பல்கலைக்கழகம் (VSMU) ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. ரஷ்யாவின் சிறந்த 20 மருத்துவப் பள்ளிகளில் ஒன்றாக அதன் இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ள VSMU பல்கலைக்கழகம், 8,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.
ஜனவரி 2023 இல் அம்பாதீப் கட்டிட முகவரியில் அமைக்கப்பட்ட 24×7 RAS ஓவர்சீஸ் அறக்கட்டளையின் பெயரை சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் குறிப்பிடுகிறது. 24x7RAS ஓவர்சீஸ் அறக்கட்டளையின் இரண்டாவது இயக்குநராக இருக்கும் கரிமா பாலயனின் பெயரை எஃப்.ஐ.ஆர் குறிப்பிடவில்லை. நிறுவனங்களின் பதிவாளர் பதிவுகள் பாலயனின் டி.ஐ.என் நிலை செயலிழந்துள்ளதாகக் காட்டுகின்றன, அதாவது நிறுவனம் வருமானத்தைத் தாக்கல் செய்ய முடியாது.
ஜூன் 2022 இல் சுயாஷ் மற்றும் அவரது சகோதரர் பார்த் முகுத் இயக்குநர்களாக அமைக்கப்பட்ட 24X7 ராஸ் ஓவர்சீஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மற்றொரு நிறுவனத்தையும் எஃப்.ஐ.ஆர் குறிப்பிடவில்லை.
நிறுவனம் அதன் பதிவு செய்யப்பட்ட முகவரியாக சஃப்தர்ஜங் என்கிளேவ் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அந்த இடத்தைப் பார்வையிட்டது, அது அலுவலகம் இல்லாத குடியிருப்பு கட்டிடம் என்பதைக் கண்டறிந்தது. சொத்தின் உரிமையாளர் நிறுவனம் அல்லது சுயாஷ் முகுத் பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.