கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு குற்றவாளி, தேரா சச்சா சவுதாவின் சர்ச்சைக்குரிய தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து 40 நாட்கள் பரோலில் வெளிவந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ஆன்லைன் சத் சங்கம் (உரையாடல்) நடத்தினார். இதில் பா.ஜ.க தலைவர், முன்னாள் கர்னால் பகுதி மேயருமான ரேணு பால குப்தா கலந்து கொண்டார்.
பரோலில் வெளிவந்த குர்மீத் இப்போது உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் தங்கியுள்ளார். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நடைபெற்ற சத்சங்கத்தில் பல உள்ளூர் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் குப்தா, குர்மீத்தை “பிதா-ஜி” என்று அழைத்தார். அவரைப் பின்பற்றுபவர்கள் இவ்வாறே அவரை அழைப்பர். குர்மீத் அவரை பின்பற்றுபவர்களை வயதைப் பொருட்படுத்தாமல் குழந்தைகள் என்றே அழைப்பார்.
பஞ்சாயத்துத் தேர்தல் மற்றும் ஆதம்பூர் இடைத்தேர்தல் நெருங்கி வருவதால், குர்மீத் பரோலில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்னால் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டரின் தொகுதியாகும். குர்மீத் பரோல் குறித்து பேசுகையில், இது வழக்கமான நடைமுறை என்றும் ஒரு குற்றவாளியின் நியாயமான உரிமை என்றும் கூறினார்.
குப்தாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. குர்மீத் ராம் அவரது 2 பெண் சீடர்களை பலாத்காரம் செய்ததற்காகவும், ஒரு பத்திரிகையாளரை கொலை செய்ததற்காகவும், முன்னாள் மேலாளரைக் கொலை செய்ய சதி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு சிறையில் இருந்தார். கடந்த அக்டோபர் 15-ம் தேதி பரோலில் வெளிவந்து அவரது பாக்பத் ஆசிரமத்தில் தங்கி உள்ளார். ஆசிரமம் வந்தவுடனேயே அவர் தனது ஆதரவாளர்களுக்கு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில்,
“நான் ஆசிரமம் வந்தடைந்துவிட்டேன். கடவுள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். முன்பு சொன்னது போல் நம்பிக்கை வையுங்கள். என் குழந்தைகளைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உன்னதமான தந்தை, உன்னத ஆத்மா, உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியைத் தரட்டும். சிறிது நேரத்திற்கு முன்பு [இங்கே] வந்தேன். அந்த கடல்கள் உங்களுக்கு நினைவிருக்கும். கடல்கள் மேலும் உயர்ந்துள்ளன. நீங்கள் அனைவரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். [நான்] உங்களுடன் தொடர்ந்து பேசுவேன். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஆசீர்வாதங்கள்” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
பஞ்சாயத்து தேர்தல்கள் முதல் கட்டமாக, 10 மாவட்டங்களில் ஜிலா பரிஷத்-பஞ்சாயத் சமிதி உறுப்பினர்களுக்கான தேர்தல் அக்டோபர் 30-ம் தேதியும், சர்பஞ்ச் தேர்தல் நவம்பர் 2-ம் தேதியும் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக, 9 மாவட்டங்களில் ஜிலா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கு நவம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 12-ம் தேதி, சர்பஞ்ச் தேர்தல் நடக்க உள்ளது. ஆதம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“