புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிராக உண்மையிலேயே நடவடிக்கை எடுத்து, 'பதான் மகன்' போல் கொடுத்த வாக்கை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காப்பாற்றுவாரா? இல்லையா? என்று பார்க்கலாம், என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த பிப்.14ம் தேதி மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானில் இயங்கி வருவதால், தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
ஆனால், இந்திய அரசின் குற்றச்சாட்டை மறுத்த பாகிஸ்தான், 'இந்திய அரசு போதிய ஆதாரங்களை சமர்ப்பித்தால், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம்' என்றது. மேலும், இந்தியா தாக்குதல் தொடுத்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இந்த நிலையில், ராஜஸ்தானின் டோங்க் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 'பதான் மகன்' போல் நடந்து கொள்கிறாரா, இல்லையா என்று பார்க்கலாம்" என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது, "பாகிஸ்தான் பிரதமர் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றவுடன், அவரிடம் தொலைபேசியில் பேசி வாழ்த்துத் தெரிவித்தேன். அப்போது நான், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல்வேறு சண்டைகள் நடந்துள்ளன. அதில் பாகிஸ்தானுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையுமே இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், நாம் வறுமைக்கும், கல்வியின்மைக்கும் எதிராக போரிட வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், 'மோடிஜி... நான் ஒரு பதானின் மகன். நான் உண்மை மட்டுமே பேசுவேன். சொன்னதை மட்டுமே செய்வேன்' என்று கூறினார். அவர் அன்று சொன்னதுபடி நடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொடுத்த வாக்குப்படி உண்மையில் பதான் மகன் போல் நடக்கிறாரா, இல்லையா, என பார்க்கலாம்" என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஈரானை பூர்வீகமாக கொண்ட பதான் மக்கள், மிகுந்த கௌரவத்துடனும், சுய மரியாதையுடனும் வாழ்வதாக போற்றப்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.