தமிழகத்தில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது தமிழக அரசு கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஸ்.ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஏன்? என உச்ச நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 21) கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தமிழக அரசிடம் கவலை தெரிவித்தார். இந்த நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ போலி ஆனது என விளக்கம் அளித்தது. அதோடு போலி வீடியோ பரப்பிய பல்வேறு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், கைது செய்து நடவடிக்கையும் மேற்கொண்டது.
இதில், பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை தமிழக காவல்துறை பீகாரில் வைத்து கைது செய்தது. இந்நிலையில் அவர் மீது தமிழகம், பீகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம், பீகாரில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக இணைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் நாங்கள் எஃப்.ஐ.ஆர்.களை இணைக்கிறோம். ஆனால் இவர் மீது ஏன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? இவர் மீது ஏன் பழிவாங்கும் நடவடிக்கை? என்று கேள்வி எழுப்பினர்.
எஃப்ஐஆர்களை பீகாருக்கு மாற்றுவதாக வாய்மொழி உத்தரவாக கூறிய நீதிமன்றம், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.
எஃப்ஐஆர்கள் பீகாருக்கு மாற்றப்படுவதை எதிர்த்த சிபல் அவை அனைத்தும் வேறு வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவை என்று கூறினார். யூடியூப்பில் 60 லட்சம் ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட காஷ்யப், வீடியோ எடுப்பதற்காக தமிழகத்திற்கு வந்து மக்களை நேர்காணல் செய்து,
போலி வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். மேலும் காஷ்யப் ஒரு அரசியல்வாதி என்றும் அவர் தேர்தலில் போட்டியிட்டவர் என்றும் சிபல் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த வழக்குகள் அனைத்தும் போலி வீடியோ தொடர்பானது என்றும் நாங்கள் வழக்கை ரத்து செய்யவில்லை, அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பீகாருக்கு மாற்றம் தான் செய்கிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
காஷ்யப் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் தவே, அவர் ஏற்கனவே பீகாரில் காவலில் இருப்பதாகவும், தமிழக போலீசார் அவரை புரொடக்ஷன் வாரண்டில் கொண்டு சென்றதாகவும் கூறினார். மேலும் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறானது என்றார்.
பீகார் அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அவர் மீது 8 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார். அரசு அவரை “பழக்கமான குற்றவாளி” என்று அழைத்தது.
வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் காஷ்யப்பை மதுரை மத்திய சிறையில் இருந்து மாற்றக்கூடாது என்ற டேவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil