ஃபின்சென் ஆவணங்கள்- கிழியும் முகத்திரை, அம்பலமாகும் மோசடி நிறுவனங்கள்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்திய உள்நாட்டு வங்கி கிளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

By: Updated: September 21, 2020, 02:25:49 PM

RITU SARIN, SHYAM LAL YADAV, JAY MAZOOMDAAR, SANDEEP SINGH & KHUSHBOO NARAYAN

இந்தியர்கள் சம்பந்தப்பட்ட சட்ட விரோத பணம் மற்றும் பணப்புழக்கங்கள் குறித்த ரகசியங்கள் எதுவும் தோலுரிக்கப்படாமல் இல்லை. 2015 இல் சுவிஸ் வங்கி ரகசியங்கள் தொடங்கி 2016 இல் பனாமா வெளியீடுகள், 2017 இல் பாரடைஸ் பேப்பர்ஸ் வரி ஏய்ப்பு வரை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது துல்லிய விசாரணையின் மூலம் அம்பலப்படுத்தி இருந்தது.

அந்த வரிசையில், தற்போது ஃபின்சென் ரகசிய ஆவணங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிடுகிறது.

இந்தியர்களோடு தொடர்புடைய 2000க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை நடத்தியது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதுபோன்ற ரகசிய அறிக்கையை  உறுதிபடுத்தக் கூட அனுமதியில்லை. இந்த அறிக்கைகள்  அனைத்தும் அமெரிக்காவின் உயர்மட்ட கண்காணிப்புக் குழுவான நிதி மோசடி அமலாக்க முகமைக்கு ( Treasury Department’s Financial Crimes Enforcement Network – FinCEN – ஃபின்சென் ) அனுப்பப்பட்ட  பணமோசடி, பயங்கரவாதம், போதைப்பொருள் கையாளுதல், நிதி மோசடி என சந்தேகிக்கப்படும் பரிவர்த்தனைகள் குறித்த வங்கிகளின்  அபாய எச்சரிக்கை அறிகுறிகளாகும் .

சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டு அறிக்கை அல்லது எஸ்ஏஆர் (SAR) எனப்படும் அறிக்கை, ஃபின்சென்  ஆவணங்களை உள்ளடக்குகிறது. இந்த ஆவணங்கள் குற்றத்திற்கான சான்றுகளாக இருப்பதில்லை.  இருப்பினும், கடந்த  காலங்களில் நிதி மோசடிக்கான  தடயங்களைக் கொண்ட பணப் பரிவர்த்தனைகள், அதிக ஆபத்துகள் காணப்படும் நபர்கள், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகளை  கண்காணிக்கும் வங்கி கட்டுப்பாட்டு அதிகாரிகளின்  சந்தேகங்களை இந்த அறிக்கை பிரதிபலிக்கின்றது.

இதன் விளைவாக, வங்கிகளால் அடையாளம் காணப்பட்ட ஆபத்து நிறைந்த கணக்குகள் யாவும், சட்ட அமலாக்க முகமையின் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. உண்மையில், அமெரிக்கா நீதித்துறை, எஸ்ஏஆர்அறிக்கை தொடர்புடைய வழக்குகளை உரிய முறையில் விசாரித்து தண்டனைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

வாஷிங்டனை சேர்ந்த சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு (ஐசிஐஜே) பஸ்ஃபீட் நியூஸ் ஆகியவற்றுடன் இணைந்து லு மொன்டே (பிரான்ஸ்), ஆசாஹி ஷிம்பன் (ஜப்பான்), சுடீட்ச் ஜீதுங் (ஜெர்மனி), அப்டன்போஸ்டன் (நார்வே), என்பிசி (அமெரிக்கா), பிபிசி , ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என 88 நாடுகளில்  செயல்படும் 109 ஊடக அமைப்புகள் இந்த ரகசிய விசாரணையில் களம் இறங்கியது. 1999 முதல் 2017 வரையில்,  ஃபின்சென் முகமையிடம்  தாக்கல் செய்யப்பட்ட  ரகசிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்ட  இந்திய நிறுவனங்கள் மற்றும் வங்கி கணக்குகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  கண்டறிந்தது.

பத்தில் எட்டுக்கும் மேற்பட்ட எஸ்ஏஆர்  அறிக்கைகள்     டாய்ச் வங்கி (Deutsche Bank), பாங்க் ஆப் நியூயார்க் மெல்லன் (BNYM); ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (Standard Chartered Bank), சிட்டிபேங் , ஜே.பி. மோர்கன் சேஸ் உள்ளிட்ட வங்கிகள் பதிவு செய்துள்ளன. இந்த எஸ்ஏஆர் அறிக்கையில் 2 டிரில்லியன்  டாலர் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது .

உலகெங்கிலும் உள்ள முதலாளிகள், அரசியல்வாதிகள், அவர்களோடு தொடர்புடைய பினாமி நிறுவனங்கள்  வரிவிதிப்பு செய்யப்படுவதைத் தவிர்க்க வெளிநாடுகளில் உள்ள வரி ஏய்ப்பு புகலிடங்களுக்கு எவ்வாறு ஈடுபடுகின்றன என்பதை இந்த ஆவணம் படம் போட்டு காட்டுகிறது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக, இந்தியர்களோடு தொடர்புடைய அனைத்து எஸ்.ஐ.ஆர்களையும் இந்தியன் எக்ஸ்பிரஸ்  விசாரித்தது. இதில், ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், பல சந்தர்ப்பங்களில் இந்தியா சட்ட அமலாக்க முகமைகளால் விசாரிக்கப்பட்டு வரும்/ வந்த தனிநபர்கள் அல்லது நிறுவனத்தின் பெயர்கள் ஃபின்சென் முகமைக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு, 2 ஜி மோசடி போன்ற மோசடிகளில் பெயரிடப்பட்ட இந்திய நிறுவனங்களின் பரிவர்த்தனைகள்; அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்; ரோல்ஸ் ராய்ஸ் லஞ்ச வழக்கு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு போன்ற பிற ஊழல் வழக்குகளில் தொடர்புடைய நிறுவனங்கள், வரி ஏய்ப்பு  வழக்குகளில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஃபின்சென் ஆவனத்தில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில், அமலாக்க இயக்குனரகம், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம், மத்திய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட முகமைகள் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபின்சென்  ரகசிய ஆவண தகவல் அடிப்படையில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மேற்கொண்ட உயர்மதிப்பு பணப் பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள்  தற்போது வெளியாகியுள்ளது.

பழங்கால சிலை கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட  கடத்தல்காரர்; பல வெளிநாட்டு நிதி மோசடியில் அடையாளம் காணப்பட்ட இந்திய குடிமகனுக்கு  சொந்தமான உலகளாவிய வைர நிறுவனம்; இந்தியாவின் முன்னணி சுகாதார மற்றும் விருந்தோம்பல் நிறுவனம் ; திவாலான எஃகு உற்பத்தி நிறுவனம்; பல உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் சொகுசு கார் நிறுவனர் ; ஒரு  பன்னாட்டு குழு அமைப்பு ; இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியின் ஸ்பான்சர்; அமலாக்க இயக்குனரகத்துக்குள் (ED) குழப்பம் ஏற்பட  காரணமான ஹவாலா வியாபாரி, இந்தியாவைச் சேர்ந்த உலகளாவிய தீவிரவாதியின் முக்கிய நிதியாளர் போன்றோர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன .

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்திய உள்நாட்டு வங்கி கிளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; சில சந்தர்ப்பங்களில், இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகள் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, கோட்டக் மஹிந்திரா, எச்.டி.எஃப்.சி, கனரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகளில் பட்டியலில் முக்கியமானதாக கருதப்படுகிறது .

“சந்தேகத்திற்குரியது” என்று 3,201 பணப் பரிவர்த்தனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 3 1.53 பில்லியன் அமெரிக்கா டாலராகும். பல்வேறு நிறுவனங்களுடன் (அனுப்புநர்கள், சமந்தப்பட்ட  வங்கிக் கிளை, பயனாளிகள்) இணைக்கப்பட்ட நிறுவனத்தின் இந்திய முகவரிகள் கிடைத்தவைகளின் எண்ணிக்கை மட்டும் இதுவாகும் . இவை, ஒவ்வொரு எஸ்.ஐ.ஆர் அறிக்கையில்  விரிதாளாக (Spreadsheet) இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், வெளிநாட்டு அதிகார வரம்புகளில் உள்ள அனுப்புநர்கள், பயனாளிகள் முகவரிகளைக் கொண்ட இந்திய நிறுவனங்களின்  ஆயிரக்கணக்கான பரிவர்த்தனைகளும் அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எஸ்.ஐ.ஆர் ஆவணத்தின் முக்கிய உரையில் எடுத்துரைக்ககப்பட்டுள்ளது.

முக்கிய உலகளாவிய வெளிப்பாடுகளில், ரோட் தீவின் போதைப்பொருள் வியாபாரிகள் சிலர் சீனா வுஹானில் உள்ள ஒரு வேதியியல் ஆய்வகதிற்கு பெருந்தொகையை அனுப்பியது கண்டறியப்பட்டது ; ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடந்தேரிய  முக்கிய  ஊழல்கள்; நியூயார்க் காட்சியகங்களுக்கு விற்கப்பட்ட பண்டைய புத்த சமய கலைப்பொருட்களை திருடிய கொள்ளையர்கள் ; பொது வீட்டுவசதி மற்றும் சுகாதார சேவைகள் மூலம் பெரும் ஊழல் செய்த  வெனிசுலா தொழில் அதிபர்கள்;  மத்திய கிழக்கின் மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான  பணமோசடி விசாரணை குறித்த தகவல்கள் வந்துள்ளன.

ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களின் பட்டியலில், மோசடி மற்றும் வரி ஏய்ப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிபர் டொனால்ட் டிரம்பின்  முன்னாள் பிரச்சார மேலாளர் பால் மனாஃபோர்ட்டு பெயர் இடம்பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:One more veil lifts suspicious bank transactions of indians are red flagged to top us regulator

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X