மக்களவை, மாநில சட்டப் பேரவைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று (டிச.17) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பிடம் கருத்துகளை கேட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.
தொடர்ந்து சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், இந்த நேற்று தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.
மசோதா தாக்கல் செய்யப்படும்போது அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருக்கவேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அவர் 3 நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று அவர் டெல்லி திரும்புகிறார். அவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்தே இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“