உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை ஆன்லைனில் ட்ரோல் செய்யப்பட்டது தொடர்பாக அவசர நடவடிக்கை கோரி 13 எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
“வார்த்தைகளும் உள்ளடக்கங்களும் மோசமானவை மற்றும் வருந்தத்தக்கவையாக இருந்தன. இது சமூக ஊடக தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது” என்று மார்ச் 16-ம் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதியின் போக்கில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டி, 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டை ஆன்லைனில் ட்ரோல் செய்ததற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
“மாண்புமிகு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு, மகாராஷ்டிராவில் அரசாங்க உருவாக்கம் மற்றும் ஆளுநரின் பங்கு விவகாரத்தில் ஒரு முக்கியமான அரசியலமைப்பு பிரச்சினையைக் எடுத்து விசாரிக்கிறது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இந்த விவகாரம் நீதித்துறைக்கு உட்பட்டது என்றாலும், மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியின் நலனுக்காக அனுதாபம் கொண்ட சமூக ஊடக ட்ரோல் ஆர்மி, மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதிக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியது. வார்த்தைகளும் உள்ளடக்கங்களும் மோசமானவை, வருந்தத்தக்கவையாக இருந்தன. இது சமூக ஊடக தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது” என்று மார்ச் 16 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை காங்கிரஸ் எம்.பி. விவேக் தன்கா எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் திக்விஜய சிங், சக்திசிங் கோஹில், பிரமோத் திவாரி, அமீ யாக்னிக், ரஞ்சீத் ரஞ்சன், இம்ரான் பிரதாப்கர்ஹி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சாதா, சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் அணி) உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் ஜெயா பச்சன் மற்றும் ராம் கோபால் யாதவ் ஆகியோரால் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதே பிரச்சினை தொடர்பாக இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணிக்கும் தன்கா தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அரசாங்கத்தை கவிழ்க்க காரணமாக இருந்த மகாராஷ்டிர முன்னாள் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியின் நடவடிக்கையின் செல்லுபடியாகும் வழக்கு விசாரணையைத் தொடர்ந்து ஆன்லைன் ட்ரோல்கள் தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறை மீது தாக்குதல் நடத்தியதாக அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே அரசுக்கு பதிலாக ஏக்நாத் ஷிண்டே அரசு அமைந்தது. மகாராஷ்டிராவின் ஆளும் கட்சியான சிவசேனா ஜூன் 2022-ல் இரண்டு பிரிவுகளாக உடைந்ததைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தது – முந்தைய அரசு உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்தது. பின்னால் வந்த அரசு ஷிண்டே தலைமையில் அமைந்தது.
முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நவம்பர் 26, 2021-ல் அரசியலமைப்பு தினத்தில் பேசுகையில், “ஊடகங்களில், குறிப்பாக சமூக ஊடகங்களில் நீதித்துறை மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இந்தத் தாக்குதல்கள் ஸ்பான்சர் செய்யப்பட்டவை, ஒத்திசைக்கப்பட்டவை… உந்துதல் மற்றும் குறிவைக்கப்பட்டவை என தோன்றியதாகவும், மத்திய விசாரணை அமைப்புகள் அவற்றை திறம்பட கையாள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
நீதிபதிகள் மீதான சமூக ஊடக விமர்சனங்களைத் தடுக்க சட்டம் இயற்ற கோரி தலைமை நீதிபதி ரமணாவும் தனக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இருப்பினும், நீதிபதிகள் மீதான விமர்சனத்தை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்று கிரண் ரிஜிஜு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“