டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராஷ்ட்ரிய ரங்ஷாலா முகாமில், குடியரசு தின அணிவகுப்பின் முக்கிய அம்சமான 21 அலங்கார ஊர்திகளுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அணிவகுப்பில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மற்றும் ஒன்பது அமைச்சகங்கள் அல்லது அரசு துறைகளின் ஊர்திகள் பங்கேற்கவுள்ளன.
குறைந்த இடம் மற்றும் நேரம் காரணமாக 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன என்று முகாமில் இருந்த பாதுகாப்பு துறையினர் மக்கள் தொடர்பு அதிகாரி நம்பிபூ மரின்மாய் (Nampibou Marinmai) தெரிவித்தார்.
நம்பிபூ மரின்மாய் கூறுகையில், " அணிவகுப்பில் அலங்கார ஊர்திகள் குறித்து பல மாநிலங்கள் குரல் எழுப்பி வருகின்றன. விஷயம் என்னவென்றால், இம்முறை குறைவான அளவிலே இடம், நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கலை, இசை, கலாச்சாரம் மற்றும் பிற நிபுணத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு உள்ளது. இந்தக் குழு தான் அவற்றை ஆராய்ந்து வருகிறது. அணிவகுப்பில் சேர, 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து விண்ணப்பங்களை பெற்றோம்.
ஆனால் இடம் மற்றும் நேரம் காரணமாக 12 மாநிலங்களை மட்டுமே தேர்ந்தெடுத்தோம்.வேறு எந்த காரணமும் இல்லை" என்றார்.
மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்கள் அணிவகுப்புக்கு தங்கள் ஊர்திகள் தேர்வு செய்யப்படாதது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்தாண்டு 75 ஆண்டுகால சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற தீமில் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட அறிவுறுத்தப்பட்டிருந்தது. அலங்கார ஊர்தியுடன் கலை நிகழ்ச்சியில் ஈடுபடுவோரில் பல மாணவர்கள் இடம்பெற்றுள்னர்.
பெங்களூரைச் சேர்ந்த 20 வயதான மாணவி அதிதி உரல், கர்நாடக மாநில அலங்கார ஊர்தியின் ஒரு பகுதியாக இருக்கும் 12 யக்ஷகானா கலைஞர்கள் குழுவில் ஒருவராவர். இந்த குழுவினர், முகாமில் 10 நாள்களாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
மற்றொரு கலைஞர் நிஷா காரயாத், பித்தோராகரில் இசை படிக்கும் கல்லூரி மாணவி ஆகும். உத்தரகாண்டின் சபேலி நிருத்யாவை நிகழ்த்தும் 16 நடனக் கலைஞர்களில் அவரும் ஒருவர் ஆவர்.
அருணாச்சலப் பிரதேச அலங்கார ஊர்தியுடன் 16 நடனக் கலைஞர்கள் தப்பு நடனம் ஆடுவார்கள். இதை அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான டேவிட் தரங் "போர் நடனம்" என்று குறிப்பிடுகிறார்.
அதேபோல், பாரம்பரிய கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் கர்நாடக அலங்கார ஊர்தியானது 45 நாட்களாக 140 தொழிலாளர்களால் வடிவமைத்து, மூன்று டிரக் லோடுகளில் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு இறுதி பணி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேகலாயாவின் அலங்கார ஊர்தி பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அலங்கார ஊர்தி பழங்குடியின புரட்சியாளர்களை குறிக்கும் வகையிலும், ஹரியானாவின் அலங்கார ஊர்தி விளையாட்டு துறையை குறிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி காசி விஸ்வநாத் தாம் மற்றும் கோவா பகுதியின் வரலாற்று மற்றும் இயற்கை இடங்களை சித்தரிக்கும் வகையிலும், மகாராஷ்டிராவின் அலங்கார ஊர்தி பயோடைவர்சிட்டியை குறிக்கும் வகையிலும், பஞ்சாப்பின் அலங்கார ஊர்தி, சுதந்திர போராட்டத்தை குறிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பில் கலந்துகொள்ளும் கலாச்சார அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி ஸ்ரீ அரவிந்தரின் 150 வருடங்களை குறிக்கும் வகையிலும், மத்திய பொதுப்பணித்துறை அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை குறிக்கும் வகையிலும், கல்வி அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி தேசிய கல்விக் கொள்கை குறிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணிவகுப்பில், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம், சிஆர்பிஎஃப் மற்றும் தபால் துறை ஆகியவற்றின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறவுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.