10% இட ஒதுக்கீடு : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்... மாநிலங்களவையில் இன்று விவாதம்

பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா, 3 வாக்குகள் மட்டும் எதிராக பெற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் நேற்று அறிமுகம் செய்தார்.

10% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

இந்த மசோதா குறித்து, நாடாளுமன்றத்தில் சுமார் 4 மணி நேரமாக காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியில், 323 வாக்குகள் ஆதரவாகவும், வெறும் 3 வாக்குகளே எதிராகவும் பெற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. இந்த மசோதா நிறைவேற்றத்தின்போது பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருந்தனர். இத்துடன் மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவால் சாதி கடந்து ஏழைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழகம் தவிர்த்து, நாடு முழுக்க 49.5 சதவிகித இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதன்மூலம் பொதுப்பிரிவனரில் மொத்தம் 19 கோடி பேர் பலன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close