இந்தியாவில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில், ஒமிக்ரான் அச்சுறுத்தலால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,716 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி 351 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ''டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் பீதி அடையத் தேவையில்லை.
தினசரி கொரோனா பாதிப்பு 1,796இல் இருந்து 2700ஆக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது 6 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால்,மூன்று நாள்கள் முன்பு வரை, வெறும் 2 ஆயிரம் பேர் தான் சிகிச்சை பெற்று வந்தனர்.
டிசம்பர் 29 அன்று, 262 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், ஜனவரி 1 அன்று எண்ணிக்கை 242 ஆக இருந்தது. இது தற்போதைய பாதிப்பு லேசானதாகவும் அல்லது அறிகுறியற்றதாகவும் இருப்பதை காட்டுகிறது.
தற்போது டெல்லியில் 82 ஆக்சிஜன் படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சிகிச்சைபெறுவதாகவும், சுமார் 37,000 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.
மார்ச் 27 அன்று, தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,600 ஆக இருந்தது ஆனால் அப்போது 1,150 ஆக்சிஜன் படுக்கைகளை நிரம்பியிருந்தது. தினந்தோறும் 10 பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், ஒருவர் கூட இறப்பது கிடையாது.
நாம் பொறுப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். டெல்டாவை விட ஒமைக்ரான் தொற்று மிதமானது தான்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil