ஷைஜூ பிலிப்
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டியின் உடல்நிலையை கண்காணிக்க 6 பேர் கொண்ட பல்துறை மருத்துவக் குழுவை கேரள அரசு செவ்வாய்க்கிழமை அமைத்தது.
79 வயதான உம்மன் சாண்டி, 2019 ஆம் ஆண்டு முதல் நோய்வாய்ப்பட்டு, அக்டோபர் மாதம் பெர்லின் சாரிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், பெங்களூருவில் உள்ள ஹெல்த் கேர் குளோபல் எண்டர்பிரைசஸில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து சமீபத்தில் திருவனந்தபுரம் திரும்பினார். அவர் தற்போது நெய்யாற்றின்கரை நிம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உம்மன் சாண்டியின் தம்பி அலெக்ஸ் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில், உம்மன் சாண்டிக்கு அவரது குடும்பத்தினர் உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதாகக் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து சர்ச்சை தொடங்கியது. அலெக்ஸ் தனது சகோதரருக்கு ஆயுர்வேத சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுவதாகவும், நவீன மருந்துகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மறுநாள், முன்னாள் முதல்வர் மற்றும் அவரது மகன் சாண்டி உம்மன் குற்றச்சாட்டை மறுத்தார். ஒரு பேஸ்புக் வீடியோவில், உம்மன் சாண்டி தனது சிகிச்சை குறித்த ஊடக அறிக்கைகள் ஆதாரமற்றவை மற்றும் வேதனையானவை என்று கூறினார்.
”எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எனது நோய் மற்றும் தேவையான சிகிச்சைகள் பற்றிய தெளிவான கருத்து உள்ளது. எனது கட்சியும் எனது குடும்பத்தினரும் நவீன மருத்துவத்தின் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து எனது சிகிச்சையை முன்னெடுத்து வருகின்றனர். ஊடகங்களின் தவறான பிரச்சாரம் எனக்கு மன அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.
சமீபத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற சாண்டி உம்மன், வீடியோவில், “நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, நான் இந்த இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறேன். எனது தந்தைக்கு குடும்பத்தினரும், கட்சியினரும் சிறந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு காங்கிரஸ் அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறது. நான் இப்போது அனுபவிக்கும் நிலைமையை வேறு எந்த மகனும் சந்திக்கக் கூடாது” என்றார்.
சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் சாண்டியை மருத்துவமனையில் சந்தித்து, நிம்ஸ் மெடிசிட்டி மருத்துவர்களுடன் கலந்துரையாடியதை அடுத்து, மருத்துவ வாரியம் அமைப்பதாக கேரள அரசு அறிவித்தது. இந்த குழு மருத்துவர்களுடன் கலந்துரையாடி, முன்னாள் முதல்வரின் உடல்நலம் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளை மதிப்பாய்வு செய்யும் என்று அமைச்சரின் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜார்ஜ், சாண்டி உடல்நிலை சீராக இருப்பதாக கூறினார். சாண்டி உடல்நிலை சீரானவுடன் பெங்களூருவுக்கு மாற்றப்படுவார் என்று அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“