/indian-express-tamil/media/media_files/2025/05/12/OUpF4lTmlbpEP13zjip9.jpg)
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று (மே 12) உரையாற்றினார். அப்போது, பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா புதிய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தாக்குதலின் போது ஏற்பட்ட சேதத்திற்கு பின்னர் உலக நாடுகளிடம் பாகிஸ்தான் முறையிட்டதால் ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தி வைத்துள்ளதாகவும், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
"நாங்கள் ஒரு புதிய இயல்பு நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம்" என்று மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். "தீவிரவாதத்திற்கு எதிரான எங்கள் கொள்கை தான் ஆப்ரேஷன் சிந்தூர். இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். தீவிரவாதத்தின் வேர்கள் எங்கிருந்து வருகின்றனவோ, அந்த இடங்கள் அனைத்திலும் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்தியா, எந்த அணு ஆயுத மிரட்டலையும் ஏற்காது... தீவிரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கத்தையும், தீவிரவாத அமைப்புகளையும் நாங்கள் வெவ்வேறாக பார்க்க மாட்டோம்" என்று மோடி கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் "நிராதரவாகவும், நம்பிக்கையற்றதாகவும்" உணர்கிறது என்று மோடி கூறினார். "இந்த சூழலில், அது மற்றொரு தவறான முயற்சியை மேற்கொண்டது. எங்கள் பள்ளிகள், கோயில்கள், குருத்வாராக்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ராணுவ நிறுவல்களைத் தாக்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால், அது அம்பலமானது. எங்கள் பலமான வான் பாதுகாப்பு அமைப்புக்கு முன்னால் அவர்களின் ஆளில்லா விமானங்களும், ஏவுகணைகளும் எப்படி தகர்க்கப்பட்டன என்பதை உலகம் பார்த்தது. பாகிஸ்தான் எல்லை தாக்குதலுக்கு தயாரானது. ஆனால், நாங்கள் அவர்களின் மார்பில் தாக்கினோம். அவர்கள் மிகவும் பெருமைப்பட்ட பாகிஸ்தான் விமானப்படை தளங்களை எங்கள் ஏவுகணைகளும், ஆளில்லா விமானங்களும் சேதப்படுத்தின. மூன்று நாட்களில், பாகிஸ்தான் எதிர்பார்க்காத அளவிற்கு இந்தியா அவர்களை அழித்தது" என்று மோடி கூறினார். "அதனால், பதற்றத்தை குறைக்க பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கெஞ்சத் தொடங்கியது... அதற்குள், நாங்கள் அவர்களின் தீவிரவாத உள்கட்டமைப்பை சேதப்படுத்தினோம். பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து, தாக்குதல்களைத் தொடர மாட்டோம் என்று கூறியபோது, இந்தியா அதைப் பற்றி யோசித்தது. நாங்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்" என மோடி தெரிவித்தார்.
திங்கட்கிழமை புத்த பூர்ணிமா என்பதைக் குறிப்பிட்ட மோடி, புத்தர் உலகிற்கு அமைதியின் பாதையைக் காட்டினார் என்றார். "நான் உலகிற்குச் சொல்கிறேன் - நாங்கள் பாகிஸ்தானுடன் பேசினால், தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேசுவோம். இன்று புத்த பூர்ணிமா. பகவான் புத்தர் நமக்கு அமைதியின் பாதையைக் காட்டினார். அமைதியின் பாதையும் வலிமையின் பாதையிலிருந்து வருகிறது" என மோடி குறிப்பிட்டார்.
"எங்கள் ராணுவம், விமானப்படை, கடற்படை, பி.எஸ்.எஃப் மற்றும் துணை ராணுவப் படைகள் தொடர்ந்து விழிப்புடன் உள்ளன. கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய காட்சியை நாங்கள் பார்த்தோம். எங்கள் குடிமக்களைப் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் போர்க்களத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து, ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் புதிய பரிமாணத்தை எடுத்துள்ளோம்" என்று மோடி திட்டவட்டமாக கூறினார்.
தற்போதைய காலகட்டம் போரின் காலம் இல்லை என்பது உண்மைதான் என்றாலும், இது தீவிரவாதத்தின் காலமும் இல்லை என்று பிரதமர் கூறினார். தீவிரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக்கான தேவையை வலியுறுத்திய அவர், "ஒரு நாள் அவர்கள் ஆதரிக்கும் தீவிரவாதம் பாகிஸ்தானை அழித்துவிடும். அவர்கள் தங்கள் தீவிரவாத உள்கட்டமைப்பை அகற்ற வேண்டியிருக்கும். தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக இருக்க முடியாது. தண்ணீரும், இரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது" என்று மோடி தெரிவித்துள்ளார்.
"ராணுவ வீரர்களையும், விஞ்ஞானிகளையும் நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு எனது சல்யூட். எங்கள் வீரர்கள் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பெரும் வீரத்தைக் காட்டினர். எங்கள் நாட்டின் ஒவ்வொரு தாய், சகோதரி மற்றும் மகளுக்கும் எங்கள் வீரர்களின் தீரத்தை அர்ப்பணிக்கிறேன். பஹல்காம் தாக்குதல் உலகத்தை உலுக்கியது. குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் முன் மக்களின் மதம் கேட்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டனர். இது நாட்டின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சி" என்று மோடி தெரிவித்தார். இதன் பின்னரே தீவிரவாதத்தை அழிக்க ஆயுதப் படைகளுக்கு அரசாங்கம் முழு சுதந்திரம் அளித்தது என்றும் அவர் குறிப்பிட்டார். "இன்று, எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் நெற்றியில் இருந்து சிந்தூரை அகற்ற எந்த முயற்சி நடந்தாலும் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று ஒவ்வொரு தீவிரவாத அமைப்பும் அறிந்து கொண்டது" என்று மோடி குறிப்பிட்டார்.
"முரிட்கே மற்றும் பஹவல்பூரில் உள்ள இந்த மையங்கள் உலகளாவிய தீவிரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன" என்று மோடி கூறினார். இவை பல உலகளாவிய தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரே அடியில் 100-க்கும் மேற்பட்ட ஆபத்தான தீவிரவாதிகளை இந்தியா கொன்றதாகவும் அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.