/indian-express-tamil/media/media_files/2025/05/08/CJjavGhe5bMTvnveWxwK.jpg)
இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 08) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Operation Sindoor: At least 100 terrorists killed, Rajnath Singh tells parties; Opposition pledges full support
பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற இந்த இரண்டாவது அனைத்துக் கட்சிக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும், பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தங்களது முழு ஆதரவை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினர்.
இந்த கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த அதிரடி நடவடிக்கைக்கு "ஆபரேஷன் சிந்துர்" என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, குறைந்தது 100 பயங்கரவாதிகள், கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சில முக்கிய பயங்கரவாதிகளும் அடங்குவர் என்று கூறினார்.
தற்போதைய சூழ்நிலையின் மதிப்பீட்டை அரசாங்கம் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டது. இருப்பினும், இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை என்பதால், மேலும் விவரங்களை வெளியிட இயலாது என்று அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்களும் இதனை ஏற்றுக்கொண்டனர். இந்த முக்கியமான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாததை எதிர்க்கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். "பிரதமர் தன்னை நாடாளுமன்றத்திற்கு மேலானவராக நினைத்தால் அது சரியே. நேரம் வரும்போது நாங்கள் கேள்வி கேட்போம். ஆனால் இது ஒரு நெருக்கடியான நேரம், இந்த நேரத்தில் யாரையும் விமர்சிக்க நாங்கள் விரும்பவில்லை," என்று மல்லிகார்ஜூன் கார்கே கூறியுள்ளார்.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் உறுப்பினர்களான உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் "ஆபரேஷன் சிந்துர்" நடவடிக்கையைப் பாராட்டியதுடன், அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கினர். இந்த ஒற்றுமை, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.