காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தொடர்ந்து இந்தியா-பாக். இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
"எங்கள் நடவடிக்கைகள் கவனம் செலுத்துகின்றன மற்றும் விரிவாக்கம் செய்யாதவை. பாக்கிஸ்தானிய ராணுவ நிலையங்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான கட்டுப்பாட்டைக் காட்டியுள்ளது" என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.
இதற்கிடையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மே 6 இரவு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 3 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் கூறி உள்ளது. பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து சிறிய ரக ஆயுதங்களை வைத்து பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுவந்த நிலையில், புதன்கிழமை இரவு பாகிஸ்தான் தரப்பில் இருந்து பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. "பூஞ்ச்-ரஜௌரி பகுதியில் உள்ள பீம்பர் காலியில் பீரங்கி தாக்குதலை நடத்தியதன் மூலம் பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது" என்று இந்திய ராணுவம் எக்ஸ் பதிவில் கூறி உள்ளது.
பூஞ்சில் உள்ள கிருஷ்ணா காட்டி, ஷாபூர் மற்றும் மன்கோட் மற்றும் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள லாம், மஞ்சகோட் மற்றும் கம்பீர் பிராமணா ஆகிய இடங்களில் எல்லை தாண்டிய பீரங்கி தாக்குதல் நடந்துவருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள உரி மற்றும் தங்தார் துறைகளில் இருந்தும் பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.
பாகிஸ்தான் வீரர்கள் கிட்டத்தட்ட 15 நாட்களாக 2, 3 துறைகளில் சிறிய ஆயுதங்களால் இந்திய நிலைகளைக் குறிவைத்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்களை மேற்கொண்டு வந்தன. ஆனால் சமீப காலமாக, இந்த தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள முழு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் பரவியுள்ளன.