மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அதோடு விடாமல், மகளை, ஒரே மாதத்தில் இரண்டு மனநல மையத்தில் நோயாளியாக சேர்த்த நிகழ்வு, கேரள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் சாதிக்கா. பல் மருத்துவ படிப்பு மாணவியான இவர், திருச்சூர் பகுதியில் வர்த்தகம் நடத்தி வரும் கபூர் (Gafoor) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இவர்களது திருமணத்துக்கு சாதிக்காவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தஸ்து காரணமாக, இந்த திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்று பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சாதிக்கா திடீரென்று தலைமறைவானார். இதனையடுத்து கபூர், கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு எனப்படும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக, அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டில், சாதிக்கா கூறிய தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
நவம்பர் 3ம் தேதி, தான் பெற்றோருடன் வீட்டில் இருந்தபோது, மூன்று நபர்கள் வந்தனர். அவர்கள் என் உடலில் ஏதோ மருந்தை செலுத்தினர். நான் உடனே மயக்கமானேன். கண்விழித்து பார்த்தபோது படுக்கையில் கிடந்தேன். எனதருகில் மனநிலை சரியில்லாத நோயாளிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். படுக்கை விரிப்பில் இருந்த லோகோவை பார்த்து, அது இடுக்கி பகுதியில் உள்ள எஸ்.ஹெச். மனநல மருத்துவமனை என்பதை அறிந்து கொண்டேன்.
சாதிக்கா தற்கொலைக்கு முயன்றதாகவே, பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கூறியதன் அடிப்படையிலேயே இங்கு சேர்க்க அனுமதி வழங்கப்பட்டதாக எஸ்.ஹெச் மருத்துவமனை டாக்டர் ஜோஸி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
பின்னர் டிசம்பர் 5ம் தேதி, அந்த மருத்துவமனையிலிருந்து எர்ணாகுளம் பகுதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
வழக்கு மற்றும் ஆட்கொணவு மனுவை விசாரித்த நீதிபதி, சாதிக்கா, கபூரை திருமணம் செய்ய எவ்வித தடையும் இல்லை என்றும், பெற்ற மகளையே மனநல மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர்கள் மற்றும் மனநல மருத்துவமனைகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.