பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜுன் 27) மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் 5 வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் பின் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"ஒரு நாடு எப்படி இரண்டு வகையான சட்டங்களுடன் இயங்க முடியும்" என்று குறிப்பிட்டு பொது சிவில் சட்டம் (யுசிசி) குறித்து பேசினார். பிரதமர் மோடியின் யு.சி.சி கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பிரித்தாளும் அரசியல் என்றும் மோடி அரசின் தோல்விகளிலிருந்து திசை திருப்பும் செயல் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொது சிவில் கோட் பிரச்சினை ஒரு அரசியல் கண்ணிவெடியாகும், இதை தீவிர சாமர்த்தியத்துடன் வழிநடத்தப்பட வேண்டும் என்பதை நன்கு அறிந்த காங்கிரஸ், எச்சரிக்கையுடன் விமர்சித்தது. யு.சி.சியின் நன்மை மற்றும் பிரச்சனைகளை தவிர்த்து, பிரதமரின் கருத்துக்கள் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் உள்ளன என்று கூறியது.
கவனமாக விமர்சித்த காங்கிரஸ்
"இது அனைத்தும் தற்போதைய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில் உள்ளது. மணிப்பூர் 50 நாட்களுக்கும் மேலாக எரிந்து கொண்டிருந்தது. பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் உள்ளன. அந்த விஷயங்களிலும் பிரதமர் மௌனமாகவே இருக்கிறார்.
யு.சி.சி பற்றிய பேச்சு மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி. அவரது அரசாங்கத்தின் தோல்விகளில் இருந்து ஓடுவது.. இந்த நாட்டின் உண்மையான கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
இந்து மதத்தில் யு.சி.சியை அமல்படுத்தவும்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் கூறுகையில், "உங்களால் வேலைகளை வழங்க முடியாதபோது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாதபோது, சமூகக் கட்டமைப்பைக் கிழிக்கும்போது, கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றத் தவறும்போது… நீங்கள் எது வேண்டுமானாலும் செய்வீர்கள். விரக்தியில் செய்வீர்கள். 2024-ம் ஆண்டுக்கு முன் உங்களின் ஆழமான பிரிவினைவாத அரசியல் எரியூட்டப்படும்" என்றார்.
தி.மு.கவின் டி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், “யு.சி.சியை முதலில் இந்து மதத்தில் அமல்படுத்த வேண்டும். பட்டியல், பழங்குடியின சாதியினர், உயர் சாதியினர் என அனைவரும் இந்தியாவில் உள்ள எந்த கோவில்களிலும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். எனவே, பிரதமர் முதலில் இந்து மதத்தில் யு.சி.சியை செயல்படுத்த வேண்டும். ஒரு வகுப்பினர் மட்டும் ஏன் பூஜைகள் செய்ய வேண்டும். மற்றவர்கள் கோயிலின் கருவறைக்குள் நுழையக்கூட முடியாது?" என்று கேள்வி எழுப்பியது.
2018-ல் கடைசியாகச் சட்டக் கமிஷன் யு.சி.சி இந்த கட்டத்தில் அவசியமில்லை அல்லது விரும்பத்தக்கது அல்ல" என்று கூறியதை சி.பி.எம் மேற்கோள் காட்டி விமர்சித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“