நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளாக சர்வாதிகாரம், ஊழல், துரோகம் மற்றும் சில இந்தி வார்த்தைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் உண்மை பேசக்கூடாதா எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.
நாடாளுமன்ற மழைக் கால அமர்வு ஜூலை 18ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
அதில், அராஜகம், சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி ட்விட்டரில், ‘விமர்சனம் ஆக்கப்பூர்வமாக இல்லாவிட்டால் பயன் என்ன? ஒரு சுயநலவாதியை சுயநலவாதி என்று அழைக்காமல் எப்படி அழைப்பது?
சர்வாதிகாரம், சர்வாதிகாரி, துஷ்பிரயோகம், அவமானம் மற்றும் பாசாங்குதனம் உள்ளிட்ட வார்த்தைகளை தடை செய்திருப்பது தேவையற்றது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘இது வெட்கக்கேடானது” என விமர்சித்துள்ளார். மேலும், ‘இதெல்லாம் மோடி சர்க்காரின் உண்மை வார்த்தைகள்.. அடுத்து என்ன? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், ‘ஊழல்வாதிகள் ஊழல் என்ற வார்த்தையை விரும்புவதில்லை’ எனக் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், ‘ஊழலில் ஈடுபடும்போது அதனை ஊழல் என்று மற்றவர்கள் கூறுவதை யாரும் விரும்பமாட்டார்கள். மாறாக இதனை பெருமைப்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய மத்திய அரசின் நோக்கம். 2 கோடி வேலைவாய்ப்புகள், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு என பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார்கள். அவர்களின் வார்த்தை ஜாலங்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியலில் சங்கி என்ற வார்த்தை இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி., மகுவா மொய்த்ரா.
இது குறித்து அவர் ட்விட்டரில், ‘மக்களவை மாநிலங்களவையில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் பட்டியலில் சங்கி என்ற வார்த்தை ஏன் சேர்க்கப்படவில்லை. பாஜக அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை மட்டும் பிரயோகிக்க வேண்டும் எனத் திணிப்பில் ஈடுபடுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவை அழிக்க இந்த வார்த்தை விளையாட்டை கையில் எடுத்துள்ளது” என்றார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு எம்.பி.யான டெரிக் ஓ பிரைன், ‘மக்களவையில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளை தாம் பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர். ‘மழைகால அமர்வு நடைபெறவுள்ள நிலையில் அவமானம், துஷ்பிரயோகம், ஊழல், துரோகம், பாசாங்குதனம் திறமையற்றவர் என்பன போன்ற வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நான் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவேன். என்னை இடைநீக்கம் செய்தாலும். ஜனநாயகத்துக்காக போராடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.