மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க திங்கள்கிழமை மத்திய அரசு வாய்ப்பு அளித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இவ்விவகாரத்தில் அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டன.
இதனை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, “மணிப்பூர் மக்களுக்காக எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும், விவாதத்தில் இருந்து ஓடிவிட்டதாகவும்” கூறியுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “மணிப்பூர் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லை என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் கூறுகின்றன.
இதனை நாம் தொடர்ச்சியாக கேட்டுவருகிறோம். இது தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால் விவாதிக்க வராமல் எதிர்க்கட்சிகள் ஓடிவிட்டன” என்றார்.
தொடர்ந்து, “மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உண்மையாக அக்கறை இல்லை. அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
அவர்களின் பாசாங்குதனம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. மணிப்பூரை மனதில் கொள்ளாமல் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கின்றனர்” என்றார்.
மேலும், “மணிப்பூரில் மூன்று நாட்கள் தங்கியிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள முகாம்களுக்குச் சென்று மக்களுடன் பேசினார்.
அங்குள்ள மக்கள் பிரச்னைகள் குறித்து அவர் பேசத் தயாராக உள்ளோர். ஆனால் எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை” எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“