/indian-express-tamil/media/media_files/qR8wtV3n0hX8Y6OGzVSd.jpg)
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3-வது முறையாக பதவியேற்றுள்ளது. இந்த அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இதில் 27 ஆம் தேதி நடந்த இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து மறுநாளே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதாக இருந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Parliament Session Live Updates
ஆனால் நீட் தேர்வு முறைகேடு குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசும் அளித்து இருந்தன. இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்ததுடன், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினை குறித்து பேசலாம் என தெரிவித்தார். ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பெரும்பாலும் முடங்கின.
எனினும், மாநிலங்களவையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் தொடங்கியது. பா.ஜ.க எம்.பி. சுதான்ஷு திரிவேதி இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பா.ஜ.க எம்.பி. கவிதா பதிதார் மற்றும் 9 உறுப்பினர்கள் பேசினர். இந்த நிலையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் இன்று மீண்டும் இரு அவைகளிலும் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்க துறை மற்றும் ஐ-டி போன்ற அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி முழக்கத்தில் ஈடுபட்டனர். இதில், மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், அரசியல் ஆதாயத்துக்காக சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டி உள்ளனர். முன்னதாக, நீட் தேர்வு முறைகேடு மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது குறித்து விவாதிக்க கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இன்றைய கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.