Opposition Meeting Today in Delhi Live Updates: பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று (10.12.18) நடைபெறுகிறது. இதில் முதல் முறையாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அழைப்பின் பேரில் கூட்டப்படுகிற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்றைய கூட்டத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுடன் அவர் கைகோர்ப்பது இதுவே முதல் முறை. மேலும் இடதுசாரித் தலைவர்கள் டி.ராஜா, சுதாகர் ரெட்டி போன்றோரும் கூட்டத்துக்கு வருகிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த கூட்டத்துக்கு வருவது பற்றி இன்னும் எந்தத் தகவலும் உறுதி செய்யப்படவில்லை.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (11-ம் தேதி) வெளிவர இருக்கும் நிலையில் இன்று எதிர்க்கட்சிகளின் முக்கியக் கூட்டம் டெல்லியில் நடைபெறுவது தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, நாளை நாடாளூமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிற சூழலிலும் எதிர்க்கட்சிகளின் சங்கமம் முக்கியத்துவம் பெறுகிறது.
Opposition Meet Live Updates: டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
Opposition Meet In Delhi LIVE UPDATES: டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
5:25 PM: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருந்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் பிரதிநிதிகளை அனுப்பாதது பின்னடைவு.
4:45 PM: கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் நடுநாயகமாக உட்கார்ந்தனர். மன்மோகன் சிங் அருகில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. கனிமொழியும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் முக்கியத்துவம் பெற்றனர்.
4:30 PM: கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவையும், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலையும் கூட்டத்திற்கு முன்பு சந்தித்தார்.
3:10 PM: பீகாரை சேர்ந்தவரான ஆர்.எல்.எஸ்.பி கட்சித் தலைவர் குஷ்வாஹா தனது மத்திய அமைச்சர் பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்தார். அவர் காங்கிரஸ் அணியில் இணைய முடிவு எடுத்துவிட்டதாக தெரிகிறது. எனவே இன்று நடக்கும் கூட்டத்தில் அவரும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
3:00 PM: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து வருகிற 16-ம் தேதி நடைபெற இருக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.
1:20 PM: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நாடாளுமன்ற அரங்கில் நடக்கிறது. அதே நாடாளுமன்ற வளாகத்தில் மாலை 4 மணிக்கு மேல் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டமும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
1:15 PM : எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஸ்டாலின் திமுக தலைவர் ஆனபிறகு, அவர் டெல்லி சென்றிருப்பது முதல் முறை.
நேற்று டெல்லி சென்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இடம்பெற்றனர்.