காங்கிரஸுடனான உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கான முதல் அறிகுறிகளில், தேசிய அரசியலில் தடம் பெற முயற்சிக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸுடன் பாராளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதில் ஆர்வம் காட்டவில்லை என்று சனிக்கிழமை சுட்டிக்காட்டியது.
திங்கள்கிழமை ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்க வாய்ப்பில்லை.
அஸ்ஸாம் முதல் கோவா, மேகாலயா முதல் பீகார் வரை, காங்கிரஸ் தலைவர்களை வளைக்கும் டிஎம்சியின் செயல்பாடுகளை காங்கிரஸ் விரும்பாவிட்டாலும், பிஜேபி அரசாங்கத்தை எதிர்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் வழியில் அமைதியின்மை வரக்கூடாது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஆனால், பல மாநிலங்களில் கட்சி பிளவுகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களுடன் போராடி வரும் காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை வழிநடத்தி ஒருங்கிணைக்கும் நிலையில் இல்லை என்று டிஎம்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
திமுக, ஆர்ஜேடி, இடதுசாரிக் கட்சிகள், ஜேஎம்எம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் சிவசேனா போன்ற அதன் தேர்தல் கூட்டணிக் கட்சிகளுடனான காங்கிரஸின் உறவை, சில மாதங்களுக்கு முன் சட்டசபை தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட டிஎம்சி உடனான உறவிலிருந்து வேறுப்படுத்தி பார்க்க வேண்டும் என்று டிஎம்சி வட்டாரங்கள் கூறின.
“காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது. மேகாலயாவில், காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது, கோவாவில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர், பஞ்சாப், மத்தியப் பிரதேசத்தில் உயர்மட்ட தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன... அத்தகைய சூழ்நிலையில் இருக்கும் ஒரு கட்சி... எங்களுடன் என்ன விவாதிக்கப் போகிறார்கள்... என்ன ஒருங்கிணைக்க போகிறார்கள்?,” என்று ஒரு மூத்த TMC தலைவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பற்றி கேட்டதற்கு, மற்றொரு TMC தலைவர், "5-6 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் இணைந்து எங்களுக்கு எதிராக போட்டியிட்டப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எங்கே இருந்தது... நாங்கள் BJP க்கு எதிராக எங்களின் மிகப்பெரிய போரில் ஈடுபட்டோம், அவர்கள் எங்கே இருந்தார்கள்" என்றார்.
கார்கே அழைத்த கூட்டத்தைத் தவிர்க்கும் வகையிலான டிஎம்சி பதில் குறித்து உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.
இதுகுறித்து ராஜ்யசபாவின் டிஎம்சி தலைவர் டெரெக் ஓ பிரையன் கூறுகையில் “இந்த கூட்டத்தொடரில் உள்ள பிரச்சினைகள் சுயமாக தேர்ந்தெடுக்கப்பட்டவை. மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வது, ED மற்றும் CBI இயக்குநர்கள் நீண்ட காலம் பதவியில் இருப்பதை உறுதி செய்வதற்கான அவசரச் சட்டங்கள், கூட்டாட்சியை கேலி செய்வது, BSF இன் அதிகார வரம்பை நீட்டிப்பது, Pegasus ஸ்னூப்பிங் வரிசையில் புதிய வெளிப்பாடுகள், விலைவாசி உயர்வு... இந்த பிரச்சினைகள் செல்லும் வரை அனைவரும் ஒரே பக்கத்தில் உள்ளனர் என்றார்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 2016 நவம்பரில் ராஷ்டிரபதி பவனுக்கு மம்தா பானர்ஜி தலைமையில் சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் அணிவகுப்பு நடத்திய போது காங்கிரஸ் விலகி இருந்ததை மற்றொரு டிஎம்சி தலைவர் நினைவு கூர்ந்தார். அப்போது காங்கிரஸ் எங்கே இருந்தது? எதிர்க்கட்சி ஒற்றுமை எங்கே இருந்தது? என்று அந்த தலைவர் கேள்வி எழுப்பினார்.
வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் மையத் தூண் என்றும், பிரதான எதிர்க்கட்சியாக அதன் பொறுப்பை எப்போதும் நிறைவேற்றி வருவதாகவும் காங்கிரஸ் வலியுறுத்தியது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜ்யசபாவின் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது: நீண்ட காலமாக ஆட்சியிலும், கடந்த 7 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலும் எங்களுக்கு நீண்ட அனுபவம் உள்ளது. எங்களுக்கு ஒரு அரசியலமைப்பு கடமை உள்ளது, அதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், அதை இந்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக நாங்கள் உணர்ந்துள்ளோம்; நமது குடிமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நாங்கள் முன்னெடுப்போம் என்று மக்களிடம் எதிர்பார்ப்புகள் உள்ளது என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.