பெங்களூரில் திட்டமிடப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக, டெல்லியில் சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) கூறியது. இதன்மூலம், அதன் நிலைப்பாடு குறித்த பல வாரங்களாக நிலவிய ஊகங்களுக்கு முடிவு கட்டியது.
பாட்னாவில் நடந்த முதல் எதிர்க்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி (AAP), “காங்கிரஸ் இந்த அவசரச் சட்டத்தை பகிரங்கமாக கண்டிக்காத வரையில், அக்கட்சியை உள்ளடக்கிய எந்தவொரு கூட்டணியிலும் ஒரு பகுதியாக இருப்பது "மிகவும் கடினம்" என்று கூறியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி இணையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து “டெல்லி அரசாணையைப் பொறுத்த வரையில், எங்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது, கூட்டாட்சியை நாசப்படுத்தும் மத்திய அரசின் முயற்சியை நாங்கள் தொடர்ந்து எதிர்க்கிறோம்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் நடத்தும் மத்திய அரசின் போக்கை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்’’ என்றார்.
மேலும், சனிக்கிழமை (ஜூலை 15) நடைபெற்ற நாடாளுமன்ற வியூகக் கூட்டத்தில் கட்சி தனது முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
காங்கிரஸின் இந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில், ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சதா தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி அவசரச் சட்டத்திற்கு காங்கிரஸ் தனது தெளிவான எதிர்ப்பை அறிவிக்கிறது. இது ஒரு சாதகமான வளர்ச்சியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு (பிஏசி) இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம், பிஏசி கூட்டத்திற்குப் பிறகுதான் தெரிவிக்க முடியும் என்றார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிஏசி கூட்டத்தில் பங்கேற்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“