டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பால் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 34 பேரில் 33 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்றும், 2 பேர் பூஸ்டர் ஷாட் எடுத்திருந்ததாகவும் மூத்த அதிகாரி ஒருவர், தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய மருத்துவர் சுரேஷ் குமார், "தற்போது வரை ஒமிக்ரான் மாறுபாடால் பாதிக்கப்பட்டட 34 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளோம். அதில், 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவரை தவிர, மற்ற அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள். இதை பார்க்கையில், ஒமிக்ரான் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் எளிதாக தாக்குகிறது.
இரண்டு வெளிநாட்டு பயணிகள் mRNA பூஸ்டர் டோஸை பெற்றிருந்தனர். ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காய்ச்சல், வறண்ட் தோண்டை, தலை வலி போன்ற லேசான அறிகுறிகள் தான் இருந்தன. யாருக்கும் வென்டிலேட்டர் அல்லது ஆக்சிஜன் சப்போட் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகள் தான் தென்பட்டன. இது, தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக இருக்கலாம். ஒமிக்ரான் சமூக பரவலாக மாறும் சமயத்தில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கடுமையான நோய் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் எவ்வித பயணம் மேற்கொள்ளாத 3 பேருக்கும் ஒமிக்ரான் தென்பட்டதால், அதன் பரவல் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது" என எச்சரித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 34 பேரில் 5 பேர் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள், மீதமுள்ள 29 பேர் இந்தியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து, டெல்லியில் தான் அதிகளவில் ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மற்ற நோயாளிகள் சர் கங்கா ராம், மேக்ஸ் (சாகேத்), ஃபோர்டிஸ் (வசந்த் குஞ்ச்), மற்றும் பத்ரா மருத்துவமனை (துக்ளகாபாத்) போன்ற தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
ஒமிக்ரான் பரவல் காரணமாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக எந்த நிகழ்வும் அல்லது கூட்டமும் நகரத்தில் நடைபெற அனுமதியில்லை என டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதியுங்கள் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil