முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தார், குவைத், ஈரான் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளுக்கான இந்திய தூதர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்தன.
ஞாயிற்றுக்கிழமை, பாஜக அதன் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, டெல்லி ஊடகத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இப்பிரச்னை விஸ்வரூபம் அடைய, பாஜக கட்சி "எந்த மதத்தையோ, பிரிவையோ அவமதிக்கும் விதமான பேச்சை பாஜக ஒருபோதும் ஏற்காது. இது போன்று பேசுபவர்களை பாஜக ஒருபோதும் அங்கீகரிக்காது. பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது" என அறிக்கை வெளியிட்டது.
ஆளும் கட்சித் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கையை வரவேற்ற கத்தார் வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதர் தீபக் மிட்டலை வரவழைத்து, முகமது நபிக்கு எதிரான பாஜக தலைவரின் கருத்துகளை முற்றிலும் நிராகரிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை கொடுத்தது.
அந்த அறிக்கையில், இவ்விவகாரத்தில், பாஜக நிர்வாகிள் தெரிவித்த கருத்துக்காக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் தண்டனையின்றி தொடர அனுமதிப்பது மனித உரிமைகளின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இழிவான கருத்துக்கள் மத வெறுப்பைத் தூண்டுவதற்கு வழிவகுக்கும். உலகம் முழுவதும் வாழும் 2 பில்லியன் முஸ்லீம்களை புண்படுத்தும் எனக் குறிப்பிட்டிருந்தது.
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தாருக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்த ஈரானுக்கான இந்திய தூதர், இஸ்லாத்தின் நபிகள் மீதான எந்த விதமான அவமானத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய சர்ச்சை கருத்துக்கள் எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. இவை தனிப்பட்ட உறுப்பினர்களின் பார்வையே ஆகும் என்றார்.
குவைத்தின் வெளியுறவு அமைச்சகமும், இந்திய தூதர் சிபி ஜார்ஜை வரவழைத்து, ஆளும் கட்சி ஒருவரால் வெளியிடப்பட்ட நபிகளாரின் அவமதிப்பு அறிக்கைகளை முற்றிலும் நிராகரிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கையை வழங்கியது.
அந்த அறிக்கையில், இந்தியாவில் ஆளும் கட்சியால் வெளியிடப்பட்ட அறிக்கையை வரவேற்கிறோம். அதில், சர்ச்சை கருத்தை பேசிய அதிகாரிகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், இந்த வாரம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்திற்கு பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில், மனதை புண்படுத்தும் கருத்துகளை கண்டிக்கிறோம். மோடியின் கீழ் இந்தியா மத சுதந்திரத்தை மிதித்து, முஸ்லிம்களை துன்புறுத்துகிறது என்பதை திரும்பத் திரும்பச் சொன்னேன்… உலகம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை கடுமையாக கண்டிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானியையும், நாட்டின் அமீரின் தந்தையான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியையும் நாயுடு சந்தித்துப் பேசினார்.
இந்தியாவின் எரிவாயு தேவைகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் கத்தாரில் இருந்து பூர்த்தி செய்யப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்ட நாயுடு, விற்பனை செய்பவர் - வாங்குபவர் உறவைத் தாண்டி ஒரு விரிவான ஆற்றல் கூட்டாண்மைக்கு செல்ல வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பின்னர் தோஹாவில் நடந்த இந்தியா-கத்தார் வர்த்தக மன்றத்தில் வர்த்தக சமூகத்தினரை சந்தித்து பேசினார்.
வளைகுடா நாடுகளில் தான் இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். கிடைத்த தகவலின்படி, அந்த நாடுகளில் கிட்டத்தட்ட 6.5 மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றனர்.
பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்தின் தாக்கம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகத்திலும் எதிரொலித்துள்ளது. பலரும், இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த சர்ச்சை “to know BJP” என்ற பிரச்சாரத்தின் மூலம் பாஜக பல நாடுகளை சென்றடையும் நேரத்தில் எழுந்துள்ளது. பாஜக அதன் சித்தாந்தத்தை மற்றவர்களும் புரிந்துகொள்ளும் வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, பல நாடுகளில் இருந்து உயர்மட்ட தூதர்களை அதன் தலைமையகத்திற்கு அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.