கடந்த 2019-20ம் நிதியாண்டில் அறியப்படாத, ஆதாரங்கள் இல்லாத வகையில் 55 விழுக்காடு தொகையை நிதியுதவியாக மாநில கட்சிகள் பெற்றுள்ளதாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இந்த நிதியில் 95 சதவீதம் நிதி தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது.
2019-20 நிதியாண்டில் 25 மாநில கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடைகளின் மதிப்பு ரூ. 803.24 கோடியாகும். அதில், ரூ.445.7 கோடி ஆதாரங்கள் இல்லாத வகையில் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதாரமில்லாத நிதியில் 426.233 கோடி(95.616%) தொகை தேர்தல் நிதி பத்திரங்களாகவும், மீதமுள்ள 4.976 கோடி தன்னார்வலர்களின் பங்களிப்பாகவும் வந்துள்ளது.
அதே போல, ஆதாரங்கள் இல்லாமல் தேசிய கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை அவர்களின் வருமானத்தில் குறைந்தபட்சம் 70.98% வரை இருக்கும் என கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் மாநில கட்சிகளில் டிஆர்எஸ், டிடிபி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, திமுக மற்றும் ஜேடி(எஸ்) ஆகியவை முதலிடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் ஒடிசாவின் ஆளும் கட்சி பிஜேடியும் இடம்பெற்றுள்ளது. அதிக வருமானம் ஈட்டும் கட்சிகளின் விவரங்கள்
- டிஆர்எஸ் ரூ.89.158 கோடி
- தெலுங்கு தேசம் கட்சி ரூ.81.694 கோடி
- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.74.75 கோடி
- பிஜு ஜனதா தளம் ரூ.50.586 கோடி
- திமுக ரூ.45.50 கோடி
மாநில கட்சிகளுக்கு தெரிந்தவர்கள் வழியாக கிடைத்த நன்தொகை, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், 184.623 கோடி ரூபாய் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், 22.98 விழுக்காடு அவர்களது வருமானம் ஆகும். மற்ற 172.843 கோடி ரூபாய் உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி, பிரசுரங்களின் விற்பனை, கட்சி வரி போன்ற பிற அறியப்பட்ட ஆதாரங்களில் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2018-19 நிதியாண்டுக்கான அறிக்கையில், 23 மாநில கட்சிகளின் வருடாந்திர தணிக்கை மற்றும் பங்களிப்பு அறிக்கைகளை மதிப்பாய்வு செய்ததில், அவர்களின் மொத்த வருமானம் ரூ. 885.956 கோடியாக அதிகரித்ததாகவும், அதில் ரூ. 481.276 கோடி (54.32%) ஆதாரம் இல்லாமல் வந்தது என ஏடிஆர் தெரிவித்துள்ளது.
ஏடிஆர் அறிக்கையில் கூறியிருப்பது, " அரசியல் கட்சிகளின் வருமானத்தில் மிகப் பெரிய தொகைக்கான உண்மையான நன்கொடையாளரை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எனவே, அனைத்து நன்கொடையாளர்களின் முழு விவரங்களும் ஆர்டிஐயின் கீழ் பொது ஆய்வுக்குக் கிடைக்க வேண்டும்.
வெளிநாட்டு நிதியுதவி பெறும் எந்தவொரு அமைப்பும் எந்தவொரு வேட்பாளரையோ அல்லது கட்சியையோ ஆதரிக்கவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ அனுமதிக்கக்கூடாது.
அனைத்து நன்கொடைகள் செலுத்தும் முறைகள் (ரூ. 20,000க்கு மேல் மற்றும் அதற்கும் குறைவானது), கூப்பன்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், உறுப்பினர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஐ-டி துறை மற்றும் இசிஐக்கு சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை அறிக்கைகளில் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
பாஜக 252 கோடி
பாஜக இந்தாண்டு அஸ்ஸாம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநில தேர்தலுக்கு ரூ.252 கோடி செலவிட்டதாகவும், அதில் ரூ.151.18 கோடி மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது. அதே போல், மேற்கு வங்க தேர்தலுக்கு ரூ.154.28 கோடி செலவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.