இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியை தாண்டியுள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. தற்போது இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் வாயுவை மருத்துவமனைகளில் சேமித்து, நோயாளிகளுக்கு சிலிண்டர் மூலம் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள சாகீர் ஹூசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும்போது வாயுக் கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வாயு டேங்கரில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த டேங்கரில் இருந்து ஆக்ஸிஜன் வாயு சிலிண்டர்களுக்கு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மருத்துவமனையில் இன்று டேங்கரில் இருந்து ஆக்ஸிஜன் வாயு சிலிண்டர்களுக்கு மாற்றப்படும் போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது. டேங்கரில் இருந்த ஆக்ஸிஜன் வாயு பெருமளவு கசிந்ததால் அந்த மருத்துவமனையை சுற்றி ஆக்ஸிஜன் வாயு புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்நிலையில் ஆக்ஸிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, அங்கு சிகிச்சைபெற்று வந்த நோயாளிகளில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அம்மாநில அமைச்சர் ராஜேந்திர ஷிங்கனே, இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஆரம்ப கட்ட தகவலின் படி, 11 பேர் இறந்துள்ளதாக நாங்கள் அறிந்தோம். இது தொடர்பான விரிவான அறிக்கையைப் பெற முயற்சிக்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil