காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ப.சிதம்பரம், ‘மோடி அரசு வறுமையை நோக்கி மக்களை தள்ளுகிறது’ என குறிப்பிட்டார். மன்மோகன்சிங்கும் இதில் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று (மார்ச் 17) தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடியேற்றி தொடங்கி வைத்தார். சோனியாகாந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவு நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். மத்திய அரசின் பொருளாதார கொள்கை, காஷ்மீர் விவகாரம் ஆகியவற்றில் மோடி மீதான விமர்சனத்தை அவர் வெளியிட்டார்.
ப.சிதம்பரம் அடுத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மோடி அரசு பதவியேற்றபோது நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தது. ஆனால் இன்று உலகப் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
பணமதிப்பிழப்பு என ஒரு மிகப்பெரிய பொய்யான நடவடிக்கையை மேற்கொண்டனர். எவ்வளவு பணம் திரும்ப வந்தது என்பதை இன்னும் ரிசர்வ் வங்கி சொல்ல மறுக்கிறது. இன்னும் பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கின்றது. ரிசர்வ் வங்கி கவர்னர் திருப்பதிக்கு சென்று உண்டியல் பணத்தை எண்ணுபவர்களை பார்க்க வேண்டும். ரிசர்வ் வங்கியை விட கோவில் பணியாளர்கள் வேகமாக பணம் எண்ணுவார்கள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 14 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். இது மன்மோகன்சிங்கின் சாதனை. ஆனால், பா.ஜ.க அரசு மக்களை வறுமையை நோக்கி தள்ளுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழே வரும் நபர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.